ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி உயிரிழப்பு - ஆர்டிஓ விசாரணை துவக்கம்!
கொல்லம் விரைவு ரயிலில் இருந்து தவறி விழுந்து கர்ப்பிணி உயிரிழந்த விவகாரத்தில் ரயில்வேயின் பரிந்துரையையடுத்து ஆர்டிஓ விசாரணையை தொடங்கியுள்ளது.
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து நேற்று பயணிகளை ஏற்றிக் கொண்டு புறப்பட்ட கொல்லம் விரைவு ரயில், உளுந்தூர்பேட்டைக்கும் விருத்தாசலத்துக்கும் இடையே சென்றுகொண்டிருந்த போது ஏழு மாத கர்ப்பிணி தவறி விழுந்துள்ளார். இதனை பார்த்த பெண்ணின் உறவினர்கள் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்த முயற்சித்துள்ளனர். ஆனால் அபாய சங்கிலி வேலை செய்யாததால் பக்கத்து பெட்டியில் உள்ள அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தியுள்ளனர்.
பின்னர் 8 கி.மீ தள்ளி நின்ற ரயிலில் இருந்து இறங்கிய உறவினர்கள், கர்ப்பிணி தவறி விழுந்த இடம் நோக்கி ஓடிச் சென்று பார்த்த போது அவர் கிடைக்கவில்லை.
இதையடுத்து அங்கிருந்து 20 நிமிடங்கள் தாமதமாக விருத்தாசலம் ரயில் நிலையம் வந்தது. ரயிலில் இருந்து கதறி அழுதுகொண்டே இறங்கிய கர்ப்பிணியின் உறவினர்களிடம் அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்து போலீசார் விசாரணை நடத்தினர்.
அவர்களிடம் நடந்ததைக் கூறி கர்ப்பிணியை மீட்டு தருமாறு கதறி அழுதனர். இதையடுத்து ரயில்வே போலீசார் விரைந்து சென்று கர்ப்பிணியை தேடும் பணியில் ஈடுபட்டனர். இரண்டு மணி நேர தேடலுக்குப் பின் உளுந்துர்பேட்டையில் இருந்து 1 கிலோ மீட்டர் தொலைவில் இறந்து கிடந்த கர்ப்பிணியின் உடலை மீட்டனர். அவரது உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்.
சென்னை பெரியார் நகர் திரிசூலத்தை சேர்ந்த பி.எஸ்சி செவிலியர் பட்டதாரியான கஸ்தூரிக்கும், சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் பட்டதாரியான தென்காசி மாவட்டம் மேலநீலிதநல்லூரைச் சேர்ந்த சுரோஷ்குமாருக்கும் கடந்த 9 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. 7 மாத கர்ப்பிணியான கஸ்தூரிக்கு நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை (மே 5) வளையகாப்பு நிகழ்ச்சி நடைபெற இருந்தது.
இதற்காக தனது குடும்பத்தினருடன் கொல்லம் விரைவு ரயிலில் முன்பதிவு செய்து ஊருக்கு சென்றுள்ளனர். ரயில் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையை அடுத்த பூ.மாம்பாக்கம் ரயில்வே மேம்பாலம் பகுதியில் சென்று கொண்டிருந்த பொழுது திடீரென கஸ்தூரிக்கு வாந்தி, மயக்கம் வந்துள்ளது. இதனையடுத்து உறவினர்கள் உதவியுடன் ரயில் படிக்கட்டின் முன் நின்று வாந்தி எடுத்துள்ளார். அப்போது நிலை தடுமாறி ரயிலில் இருந்து கஸ்தூரி கீழே விழுந்துள்ளார். கீழே விழந்ததில் தலையில் அடிப்பட்டு பலத்த காயமடைந்த கஸ்தூரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்த தகவலறிந்த விருத்தாசலம் ரயில்வே போலீசார் விரைந்து வந்து கஸ்தூரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் விருத்தாசலம் ரயிவ்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கஸ்தூரி ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த விவகாரம், ரயில் பெட்டியில் அபாய சங்கிலி செயல்படாத புகார் குறித்தும், பலியான பெண் ஏன் ரயில் பெட்டியின் கதவு அருகே சென்றார் என்பது குறித்தும் விசாரணை நடத்தவும் தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது. இதனிடையே ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த கஸ்தூரிக்கு திருமணமாகி 9 மாதங்கேளே ஆனதால் விசாரணை நடத்த திருக்கோவிலூர் கோட்டாட்சியர் கண்ணனுக்கு ரயில்வே இருப்புப்பாதை போலீசார் கடிதம் எழுதினர். இதனையடுத்து ஆர்டிஓ விசாரணையைத் தொடங்கியுள்ளது.