தென்மாவட்ட வெள்ள பாதிப்புகள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தொலைபேசியில் கேட்டறிந்த பிரதமர் மோடி!
தமிழ்நாட்டின் மழை, வெள்ள பாதிப்பு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரதமர் மோடி பேசியுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 17, 18-ம் தேதிகளில் பெய்த கனமழையின் காரணமாக தாமிரபரணியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் கடந்த 17, 18-ம் தேதிகளில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்புப் பணிகள் தொடா்ச்சியாக ஒரு வார காலம் மேற்கொள்ளப்பட்டு, பல இடங்களில் இயல்பு நிலை திரும்பிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இயல்புநிலை திரும்பியுள்ளது.
இதுகுறித்து முதலமைச்சர் ஸ்டாலின் பதிவிட்டுள்ள எக்ஸ் தளத்தில், "தென் தமிழ்நாட்டில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை பிரதமர் மோடி கேட்டறிந்தார். தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய பிரதமரிடம் தமிழ்நாட்டின் வெள்ள பாதிப்புகளை விளக்கினேன். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்பாக மாநில அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை பிரதமரிடம் தெரிவித்தேன்.
மிக்ஜாம் புயல், தென் மாவட்டங்கள் வெள்ள பாதிப்புகளை சரி செய்ய தேவையான உதவிகளைச் செய்வதாக பிரதமர் மோடி உறுதி அளித்தார். வெள்ள பாதிப்பை ஆய்வு செய்ய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை அனுப்புவதாக பிரதமர் மோடி கூறினார்" என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.