#Madurai | சூரசம்ஹார நிகழ்வு - திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!
சூரசம்ஹார நிகழ்வை முன்னிட்டு, மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
அறுபடை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி
திருக்கோயிலில், கந்த சஷ்டி விழா கடந்த 2-ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன்
தொடங்கியது. காப்பு கட்டிய பக்தர்கள் கடந்த ஆறு நாட்களாக கோயில் வளாகத்தில்
தங்கி விரதம் மேற்கொண்டு வருகின்றனர். கந்த சஷ்டி விழாவான இன்று, சூரனை வதம்
செய்யும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
சூரனை வதம் செய்வதற்காக தாய் கோவர்த்தனாம்பிகை இடம் இருந்து, வேல் வாங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து இன்று சன்னதி தெருவில் சொக்கநாதர் கோயில் அருகே சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி மாலை 6 மணிக்கு நடைபெறும். சூரனை வதம் செய்வதற்காக சிவப்பு நிற பட்டாடை அணிந்து மயில் வாகனத்தில் அமர்ந்து சுப்பிரமணியர் காட்சியளிப்பார்.
இந்த கந்த சஷ்டி விழாவை காண, மதுரை மட்டுமல்லாது திருமங்கலம், சோழவந்தான், உசிலம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல்லாயிரம் கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். காலை முதலே பக்தர்கள் கூட்டம் கோயிலில் அலை மோதி வருகிறது. கூட்ட நெரிசலை தவிர்க்க சன்னதி தெருவில், இருபுறமும் தடுப்புகள் அமைக்கப்பட்டு, தடுப்புகளுக்குள்ளே மக்கள் அமர்ந்து சூரசம்ஹார நிகழ்வை காணுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பிற்காக, 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.