ஜம்மு & காஷ்மீரில் விரைவில் தேர்தல் - பொது சின்னங்களை ஒதுக்க அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் விண்ணப்பிக்க தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்!
ஜம்மு & காஷ்மீரில் விரைவில் தேர்தல் நடைபெற உள்ளதால் பொது சின்னங்களை ஒதுக்க அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் விண்ணப்பிக்குமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியானது. 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 293 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றன. இதில் பாஜக மட்டும் 240 இடங்களை பெற்ற நிலையில், ஆட்சி அமைப்பதற்கான தனிப்பெரும்பான்மை பெறாத நிலை ஏற்பட்டது. இதனால் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி மற்றும் நிதிஷ் குமாரின் ஜக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவோடு நாளை (ஜூன் 9) மோடி பிரதமராக பதவியேற்கவுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சட்டப்பேரவை தேர்தல்
வாக்கு எண்ணிக்கைக்கு ஒரு நாளைக்கு முன்பு பத்திரிகையாளர்களை சந்தித்த இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் விரைவில் மாநில தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார்.
பதிவு செய்யப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்துவதற்கு விண்ணப்பிக்க வேண்டும். அதன்படி ஒரு சட்டப் பேரவையின் பதவிக்காலம் முடிவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பு 'பொது சின்னத்திற்கு' அவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். ஆனால் ஜம்மு காஷ்மீரில் இன்னும் தேர்தல் நடத்தப்படாததால் தேர்தல் ஆணையம் தற்போது விண்ணப்பங்களை வழங்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பரில், ஜம்மு காஷ்மீரில் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் சட்டசபை தேர்தலை நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தேர்தல் குழுவுக்கு உத்தரவிட்ட நிலையில் தற்போது தேர்தல் ஆணையம் தேர்தலுக்கான பணிகளை துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.