இசையமைப்பாளராக அறிமுகமான #HarrisJayaraj மகன்!
ஹாரிஸ் ஜெயராஜின் மகன் சாமுவேல் நிக்கோலஸ் ஆல்பம் மூலம் இசை துறையில் அடியெடுத்து வைத்துள்ளார்.
தமிழ் சினிமாவின் பிரபலமான இசையமைப்பாளர்களில் ஒருவர் ஹாரிஸ் ஜெயராஜ். இவர் சுமார் 22 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் கலக்கி வருகிறார். ஹாரிஸ் ஜெயராஜை பின்பற்றி அவரது மகன் சாமுவேல் நிக்கோலசும் இசை உலகத்தில் அடியெடுத்து வைத்துள்ளார். சாமுவேல் நிக்கோலஸ் 'ஐயையோ' என்ற பாடலை பாடியுள்ளார். மேலும், அவரே இப்பாடலுக்கு இசையமைத்ததுடன, அதில் நாயகனாக நடித்துள்ளார். இப்பாடலை முன்னணி இசை நிறுவனமான திங்க் மியூசிக் வெளியிட்டுள்ளது.
இப்பாடல் குறித்து சாமுவேல் நிக்கோலஸ் பேசுகையில், "ஏழாம் அறிவு படத்தில் கோரஸ் பாடகராக இசைப் பயணத்தை தொடங்கிய நான், எனது தந்தையாரின் இசை நிகழ்ச்சிகளில் கித்தார் கலைஞராகவும் பாடகராகவும் பங்காற்றியுள்ளேன். 'தேவ்' திரைப்படத்தின் பின்னணி இசையில் ஒரு பாடலையும் பாடியுள்ளேன். தற்போது 'ஐயையோ' பாடல் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆவது மகிழ்ச்சியாக உள்ளது" என்றார்.
சாமுவேல் நிக்கோலஸ் 4 வயதில் இருந்து டிரினிட்டி இசைப் பள்ளியின் பாடத்திட்டத்தின் படி இசையை கற்று வந்தது குறிப்பிடத்தக்கது. 'ஐயையோ' பாடலை மோகன்ராஜ் மற்றும் சாமுவேல் நிக்கோலஸ் இணைந்து எழுத சனா மரியம் இயக்கியுள்ளார். இப்பாடல் வெளியாகி பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்பாடலின் மூலம் சாமுவேல் நிக்கோலஸ் கவனம் பெற்றுள்ளார்.