“நாட்டில் சிலர் கடவுளாக விரும்புகின்றனர்; பின்னர் கடவுளாக நினைத்துக் கொண்டு விஸ்வரூபம் எடுத்துவிடுகின்றனர்!” - மோகன் பகவத்
நாட்டில் சிலர் கடவுளாக விரும்புகின்றனர்; பின்னர் கடவுளாக நினைத்துக் கொண்டு விஸ்வரூபம் எடுத்துவிடுகின்றனர் என ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தலைவர் மோகன் பகவத் காட்டமாக விமர்சித்திருக்கும் நிலையில் அது விவாதத்தை கிளப்பியுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியில் மோகன் பகவத் பேசியதாவது:
நமது நாட்டின் எதிர்காலம் பிரகாசமாகவே இருக்கிறது. இதில் எந்த ஒரு சந்தேகமும் வேண்டாம். நல்லதையே நினைப்போம். நல்லதே நடக்கும். நாம் அனைவரும் நாட்டின் எதிர்காலத்துக்காக பணியாற்றுவோம். இந்திய மக்களுக்கு என தனித்துவமான குணம் உண்டு. நாட்டுக்காக உழைப்பதுதான் அது.
நமது நாட்டில் பல்வேறு வழிபாட்டு முறைகள் உள்ளன. 33 கோடி ஆண், பெண் தெய்வங்கள் இந்த நாட்டில் இருக்கின்றன. 3,800-க்கும் மேற்பட்ட மொழிகள் இந்தியாவில் பேசப்படுகின்றன. இந்த நாட்டு மக்களின் உணவுப் பழக்கங்கள் கூட வேறுபட்டுள்ளன. ஆனாலும் நாம் நமது நாட்டின் எதிர்காலம் பற்றி சிந்திக்கிறோம். உழைக்கிறோம். முற்போக்கு என்ற பெயரில் சில சக்திகள் இந்த நாட்டை பின்னோக்கித் தள்ளிவிட முயற்சிக்கின்றன.
கொரோனா காலத்துக்கு பின்னர் அமைதிக்கும் மகிழ்ச்சிக்கும் உரிய இடமாக இந்தியாவை அனைவரும் பார்க்கின்றனர். சனாதன தர்மம் என்பது மனிதநேயத்தை அடிப்படையாகக் கொண்டது. கடந்த 2,000 ஆண்டுகளில் எத்தனையோ பரிசோதனை முயற்சிகள் இந்த மண்ணில் நிகழ்த்தப்பட்டுள்ளன. ஆனால் பாரம்பரியமான இந்திய வாழ்வியல் முறைதான் மகிழ்ச்சிக்குரியதாக இருந்து வருகிறது. சனாதன தர்மம் என்பது உல்லாச அரண்மனைகளில் இருந்து வந்துவிடவில்லை. ஆசிரமங்களில் இருந்தும் வனங்களில் இருந்தும் வந்ததுதான் சனாதன தர்மம். நாம் நமது உடைகளை மாற்றலாம்.. ஆனால் நமது அடிப்படை குணாம்சங்களை மாற்ற முடியாது.
மனிதர்களாகப் பிறந்துவிட்ட பின்னர் சிலர் சூப்பர்மேன்களாக ஆசைப்படுகின்றனர். தங்களையே கடவுளாக உருவகப்படுத்திக் கொள்கின்றனர். அப்படி கடவுளாக தங்களை நினைத்துக் கொள்கிறவர்கள் ஒரு கட்டத்தில் விஸ்வரூபமாகவும் செயல்படுகின்றனர். இவ்வாறு மோகன் பகவத் பேசினார்.
லோக்சபா தேர்தல் பிரசாரத்தின் போது பேசிய பிரதமர் மோடி, தாம் மனிதப் பிறவி அல்ல. உயிரியல் ரீதியாகப் பிறக்கவில்லை. என்னை இந்த உலகிற்கு அனுப்பியதே பரமாத்மாதான். நான் பெற்றிருக்கும் ஆற்றல் சாதாரணமானது அல்ல. ஏதோ ஒரு விஷயம் நடக்க வேண்டும் என்பதற்காகவே பரமாத்மாவால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளேன். என்னுடைய ஆற்றலை கடவுள் மட்டும்தான் கொடுக்க முடியும் என கூறியிருந்தார்.
பிரதமர் மோடியின் இந்த பேச்சு கடும் விமர்சனங்களுக்குள்ளானது. இந்த நிலையில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தும் சிலர் கடவுளாக விரும்புகின்றனர் என கூறியிருப்பது விவாதத்தை கிளப்பியுள்ளது.