”சமூக நீதிக்கும் திமுகவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை’’- அன்புமணி ராமதாஸ்!
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸின் தமிழக மக்களின் உரிமை மீட்பு பயணம் இன்று கிருஷ்ணகிரியில் நடைபெற்றது. கிருஷ்ணகிரி ராயக்கோட்டை சாலையில் உள்ள பெருமாள் நகர் பகுதியில் இருந்து கிருஷ்ணகிரி பேருந்து நிலையம் வரை நடைபயணம் மேற்கொண்ட அன்புமணி ராமதாஸ் புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
அவர் பேசியது, ”காலநிலை மாற்றத்தால் அடுத்த 15 ஆண்டுகளில் மழை பெய்யுமா என்ற சந்தேகம் உள்ளது. நீர் மேலாண்மையில் தமிழக அரசு தோல்வி அடைந்துள்ளது. தமிழக அரசு, அரசு பள்ளிகளை மூடி வருகிறது அரசு பள்ளிகளை மூடிவிட்டால் ஏழை எளிய மாணவர்கள் எங்கு சென்று படிப்பார்கள். காமராஜர் 25 ஆயிரம் பள்ளிகளை கட்டினார் என்பது வரலாறு. ஆனால் இன்று திமுக ஆட்சியில் 207 அரசு பள்ளிகளை மூடி வருகிறார்கள். தமிழகத்தில் உள்ள நான்காயிரம் அரசு தொடக்கப் பள்ளிகள் ஒரு ஆசிரியர் பள்ளிகளாக உள்ளது. தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் வகுப்பறைகளில் ஒரு ஆசிரியர் கூட கிடையாது. இவ்வளவு ஆசிரியர் பற்றாக்குறை இருக்கும் போது தமிழகத்தில் எப்படி தரமான கல்வியை கொடுக்க முடியும் தமிழக உயர்கல்வித்துறையில் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் மொத்தமுள்ள 10,500 இடங்களில் 9000 பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது” என்றார்.
தொடர்ந்து பேசிய அன்புமணி ராமதாஸ் ”இந்தியாவிலேயே மது விற்பனையில் தமிழ்நாடு முதலில் உள்ளது தமிழகத்தில் கஞ்சா விற்பனை அதிகரித்துவிட்டது. திமுக நிர்வாகி ஜாஃபர் சாதிக் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டார். தமிழ்நாட்டில் ஒரு கோடியே 30 லட்சம் இளைஞர்கள் வேலை வாய்ப்பு இல்லாமல் தவித்து வருகின்றனர். திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டில் உள்ள தனியார் நிறுவனங்களில் 75 சதவீத வேலைவாய்ப்புகளை உள்ளூர் இளைஞர்களுக்கு கொடுப்போம் என வாக்குறுதி அளித்தார்கள். ஆனால் அதனை செய்யவில்லை. வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி விட்டார்கள். அவர்களின் எதிர்காலம் வீணாகிவிட்டது. அனைத்து அரசு அலுவலகங்களிலும் முதலமைச்சருடைய படம் மாட்டப்பட்டுள்ளது. டாஸ்மாரக் கடைகளில் மட்டும் ஏன் முதலமைச்சர் படம் மாட்டப்படவில்லை. டாஸ்மாக் கடையில் ஒருபுறம் முதலமைச்சர் ஸ்டாலின் படமும் மற்றொருபுறம் முன்னாள் முதல்வர் கலைஞர் படமும் போடலாம். ஆனால் அவ்வாறு செய்ய மாட்டார்கள். ஏனென்றால் டாஸ்மாக் விற்பது தவறு என்று தெரியும். தெரிந்தே இளைஞர்களின் எதிர்காலத்தை பாழாக்குகிறார்கள்.
திமுக தேர்தல் வாக்குறுதியிள் சொன்னது போல மாதம் தோறும் மின் அளவீட்டு முறையை அமல்படுத்தியிருந்தால் பொதுமக்களுக்கு 40 சதவீதம் மின்கட்டணம் மிச்சமாகி இருக்கும். சமூக நீதிக்கும் திமுகவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது குறித்து விவாதம் நடத்த திமுகவிலிருந்து யார் வேண்டுமானாலும் வரலாம் நான் தனி நபராக வருகிறேன்” என சவால் விடுத்தார்.