ஓமலூரில் 3000 கிலோ ரேஷன் அரிசி கடத்தல் - டெம்போவை மடக்கிப் பிடித்த பொதுமக்கள்!
ஓமலூர் அருகே 3000 கிலோ ரேசன் அரிசியை கடத்திச்சென்ற டெம்போவை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்.
சேலம் மாவட்டம் ஓமலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரேசன் அரிசியை கடத்துவது அதிகரித்துள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் தொடர்ந்து புகார் கூறிவருகின்றனர். இந்நிலையில் ஓமலூர் அருகே முத்துநாயக்கன்பட்டி பகுதிக்கு இன்று அதிகாலை ஒரு டெம்போ வந்துள்ளது. அந்த டெம்போவில் மூட்டை மூட்டையாக ரேசன் அரிசி இருந்ததை பொதுமக்கள் பார்த்துள்ளனர். திருடியவர் அந்த ரேசன் அரிசியை அங்குள்ள எடை மையத்திற்கு சென்று எடை போட்டு 3000 கிலோ ரேசன் உள்ளது என தெரிந்து கொண்டார். பின்னர் திருடியவர் பணத்தை கொடுத்து எடுத்து செல் என்று செல்போனில் கூறியுள்ளார்.
இதனைக்கேட்டு சுதாரித்து கொண்ட பொது மக்கள் சுற்றி வளைத்து டெம்போவை பிடித்து கொண்டனர். மக்கள் கூட்டம் அதிகமானதை கண்ட திருடன் அங்கிருந்து தப்பித்து ஓடியுள்ளார். சுமார் 3000 கிலோ ரேசன் அரிசியை அங்குள்ள ரேசன் கடைகளில் கொள்முதல் செய்து வந்திருப்பதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்த உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் 3000 கிலோ அரிசி, டெம்போ ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தொடரும் ரேசன் அரிசி கடத்தலை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.