ஸ்மிருதி மந்தனா-பலாஷ் முச்சல் திருமணம் ரத்து...!
இந்திய கிரிக்கெட் மகளிர் அணியின் நட்சத்திர வீராங்கனைகளில் ஒருவர் ஸ்மிருதி மந்தனா. மகாராஷ்டிரத்தை சேர்ந்த இவர் அணியின் துணை கேப்டனாகவும் செயல்படுகிறார். சமீபத்தில் நடந்த மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா அணி சாம்பியன் பட்டம் வென்றதில் ஸ்மிருதி மந்தனா முக்கிய பங்கு வகித்தார். இதனிடையே பிரபல இந்தி இசையமைப்பாளரான பலாஷ் முச்சலை நீண்ட காலமாக காதலித்து வந்த ஸ்மிருந்தி மந்தனா, அண்மையில் அவருடன் மோதிரம் மாற்றி நிச்சயம் செய்துகொண்டார். இருவருக்கும் திருமணம் நவம்பர் 23 நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஸ்மிருதி மந்தனாவின் தந்தை ஸ்ரீனிவாஸ் மந்தனாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் ஸ்மிருதி மந்தனா-பலாஷ் முச்சல் திருமணம் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.
இதனைடையே ஸ்மிருதி மந்தனாவின் வருங்கால கணவர் பலாஷ் முச்சல் வேறு ஒரு பெண்ணுடன் நெருக்கமாகப் பேசியதாகக் கூறப்படும் 'ஸ்கிரீன்ஷாட்கள்' இணையத்தில் வேகமாக பரவின. அதே நேரம் , ஸ்மிருதி மந்தனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பலாஷ் முச்சல் தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்களை நீக்கிவிட்டார். மேலும் அவர், திருமண கொண்டாட்ட புகைப்படங்களையும் நீக்கியுள்ளார். இதனை தொடர்ந்து முச்சலின் 'துரோகம்'தான் திருமணம் நின்றதற்கு உண்மையான காரணம் என இணையத்தில் பெரும் சர்ச்சை வெடித்தது.
இந்த நிலையில் ஸ்மிருதி மந்தனா, தனது திருமணம் ரத்து செய்யப்பட்டது என்று இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், "கடந்த சில வாரங்களாக என் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து நிறைய விஷயங்கள் பேசப்பட்டு வருகின்றன. என் தனிப்பட்ட விஷயங்களை பகிர்ந்துகொள்ள விரும்புபவள் நான் இல்லை. இதையும் அப்படியே வைத்திருக்க விரும்புகிறேன். ஆனால், திருமணம் ரத்து செய்யப்பட்டுவிட்டது என்பதை மட்டும் தெளிவுபடுத்திக் கொள்கிறேன். இந்த விஷயத்தை இத்துடன் முடித்துக்கொள்ள விரும்புகிறேன்; நீங்களும் அதையே செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.