UPSC தரவரிசையில் தமிழ்நாடு அளவில் முதலிடம் பிடித்து அசத்திய சிவச்சந்திரன் - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து !
UPSC சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. இதில் இந்திய அளவில் இந்திய அளவில சக்தி துபே என்பவர் முதல் இடத்தை பெற்றுள்ளார். அவருக்கடுத்து ஹர்ஷிதா கோயல் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். டோங்ரே அர்ச்சித் பராக் என்பவர் மூன்றாம் இடம் பிடித்துள்ளார்.
குறிப்பாக நான் முதல்வன் மூலம் பயிற்சி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த சிவச்சந்திரன் UPSC தேர்வில் தமிழ்நாட்டில் தரவரிசையின் அடிப்படையில் முதலிடத்திலும் இந்திய அளவில் தரவரிசையில் 23ம் இடம் பெற்று சாதித்துள்ளார். இதேபோல் நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்ற தமிழ்நாட்டை சேர்ந்த மோனிகா 39-வது இடத்தை பெற்றுள்ளார்.
இந்த நிலையில் சிவச்சந்திரனுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் “எது மகிழ்ச்சி ? நான் மட்டும் முதல்வன் அல்ல ; தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொருவரும் முதல்வனாக என் பிறந்தநாளில் தொடங்கி வைத்த நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்ற மாணவர் UPSC தேர்வில் தமிழ்நாட்டுத் தரவரிசையில் முதல்வனாகியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது ! பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் திறன்களை மேம்படுத்தும் இந்தத் திட்டம், வருங்காலங்களில் இலட்சக்கணக்கானோரின் வாழ்வில் ஒளியேற்றிடும் என்ற நம்பிக்கை என் மகிழ்ச்சியாகியுள்ளது!”
இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.