“வயநாடு வெள்ளத்தின்போது சிவகார்த்திகேயன் உதவினார்” - வீராங்கனை நெகிழ்ச்சி!
2018ஆம் ஆண்டு கேரளா மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட வெள்ளத்தின்போது நடிகர் சிவகார்த்திகேயன் தானாக முன்வந்து உதவியதாக கிரிக்கெட் வீராங்கனை சஜீவன் சஜனா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விளையாட்டுச் செய்தி ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “2018ஆம் ஆண்டு வெள்ளத்தின்போது, வீடு, பதக்கங்கள், விளையாட்டு உபரகரணங்கள் அடித்து செல்லப்பட்டது. அப்போது சிவகார்த்திகேயன் தானாக முன்வந்து உதவினார். அவர் என்னை தொலைபேசியில் தொடர்புகொண்டு, 'ஏதாவது உதவி வேண்டுமா?' எனக் கேட்டார்.
என்னுடைய கிரிக்கெட் கிட் மொத்தமாக நீர் அடித்து சென்றுவிட்டது. அதனால் SPIKES SHOE மட்டும் தேவைப்படுகிறது எனச் சொன்னேன். ஒரே வாரத்திற்குள் நான் கேட்டதை வாங்கி அனுப்பிவிட்டார்” என்று நெகிழ்ச்சியாக கூறியுள்ளார். சிவகார்த்திகேயன் தயாரிப்பு மற்றும் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் கடந்த 2018ல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற ’கனா’ திரைப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷுடன் இணைந்து கிரிக்கெட் வீராங்கனை சஜீவன் சஜனா துணை நடிகையாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.