தென் மாவட்டங்களின் நிலவரம் - டெல்லியிலிருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக ஆலோசனை.!
தென் மாவட்டங்களின் மழை நிலவரம் குறித்து டெல்லியிலிருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.
குமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
மழைநீர் தேக்கம் மற்றும் அதி கனமழை காரணமாக நெல்லையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது. நெல்லையில் இருந்து செல்லும் பகல் நேர ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதையும் படியுங்கள்: தொடர் கனமழை | தென் மாவட்டங்களில் உதவிகள் கோர வாட்ஸ்ஆப் எண் அறிவிப்பு!
திருநெல்வேலியில் பேருந்து நிலையத்தில் இருந்து சிந்துபூந்துறை செல்லும் சாலை, மாவட்ட ஆட்சியர் அலுவலக பகுதிகள், ரயில் நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடி வருவதால் மாவட்டம் முழுவதும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சென்னை எழிலகத்தில் உள்ள அவசர கட்டுப்பாட்டு மையத்தில் உள்ள உள்துறை செயலர் அமுதா, போக்குவரத்துறை செயலர் பனிந்திரரெட்டி ஆகியோருடன் முதலமைச்சர் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தி மீட்பு பணிகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் தலைமைச் செயலர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு டிஜிபி, 4 மாவட்ட ஆட்சியர்கள், செயலர்கள், முதல்வரின் தனி செயலர் முருகானந்தம் ஆகியோருடன் டெல்லியிலிருந்து முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார்.