சித்தம்பலம் கோளறுபதி நவகிரக கோட்டையில் ராகு-கேது பெயர்ச்சி!
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே, சித்தம்பலம் கோளறுபதி நவகிரக கோட்டையில் நடைபெற்ற ராகு-கேது பெயர்ச்சி விழாவில், ஏராளமான பக்தர்கள் பூஜை செய்து வழிபட்டனர்.
சர்ப்ப கிரகங்கள், நிழல் கிரகங்கள் என அழைக்கப்படும் ராகு - கேது பெயர்ச்சி
வாக்கிய பஞ்சாங்கத்தின்படி அக்டோபர் 8ம் தேதியும், திருக்கணித
பஞ்சாங்கத்தின்படி நேற்று அக்டோபர் 30-ம் தேதி திங்கட் கிழமை மாலை 4.37 மணிக்கு
பெயர்ச்சி ஆகின. இந்த பெயர்ச்சியின் போது ராகு மீன ராசிக்கும், கேது கன்னி
ராசிக்கு பெயர்ச்சியானார்.
இந்நிலையில் உலகிலேயே நவ கிரகங்களுக்கு என அமைக்கப்பட்ட ஒரே கோயிலான திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள சித்தம்பலம் என்ற இடத்தில் அமைந்துள்ள கோளறுபதி நவகிரக கோட்டையில் நேற்று ராகு கேது பெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெற்றது.
சிவபெருமானை மையமாக வைத்து 27 நட்சத்திரங்கள், 9 அதி தேவதைகள், 9 நவகிரகங்கள், 108 சிவலிங்கங்கள், அழகிய நவகிரக கணபதி உள்ளிட்ட தெய்வங்கள் அமைந்துள்ளது. அனைத்து சிலைகளுக்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு ராகு கேது பகவான் உற்சவர் சிலைகள் நட்சத்திர குளத்திற்கு கொண்டுவரப்பட்டு அபிஷேகங்கள் செய்யப்பட்டன.
பின்னர் மூலவர் சிலைகளுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு பக்தர்களுக்கு
காட்சியளித்தனர். மேலும் திருப்பூர், கோவை மாவட்டத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் இந்த ராகு கேது இடப்பெயர்ச்சி விழாவில் கலந்து கொண்டு சிறப்பு யாகத்தில் பங்கேற்று, ராகு மற்றும் கேது பகவானின் பாதங்களுக்கு கங்கை நீரால் அபிஷேகம் செய்து வழிபட்டு சென்றனர்.
ரூபி.காமராஜ்