"அய்யா... இது உங்களின் உழைப்பு.." - சினிமாவை விஞ்சிய சுவாரஸ்ய திருட்டுச் சம்பவம்!
பல திருட்டுச் சம்பவங்களை சுவாரஸ்யமாக சினிமாவில் பார்த்திருப்போம். ஆனால் சினிமாவை மிஞ்சும் வகையில் ஒரு திருட்டுச் சம்பவம் நடைபெற்றுள்ளது. எங்கே நடந்தது விரிவாக காணலாம்.
சில வருடங்களுக்கு முன்பு ஒரு காணொலி இணையத்தில் படு வைரலானது. திருடன் ஒருவன், ஒரு வீட்டில் திருடிவிட்டு தப்பியோட முயற்சிக்கும்போது தன்னையே அறியாமல் அங்கே பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமராவை பார்த்து விடுவான். இதனையடுத்து செய்வதறியாது எடுத்த பொருளை அங்கேயே வைத்தது மட்டுமல்லாமல் தூரம் நின்று சிசிடிவி கேமராவில் தன்னை மன்னித்து விடுங்கள் என்று மன்றாடுவான்.
இந்த காணொலி வெளியாகி பலராலும் வெகுவாக பகிரப்பட்டு “கடவுளுக்கோ.., காவல்துறைக்கோ பயப்படாதவன் கூட கேமராவுக்கு பயப்படுகிறான்” என கருத்துக்களை தெரிவித்து வந்தனர். இந்த காணொலியில் இடம்பெற்ற திருடனின் செயலைக் கண்டு பலருக்கு கோபம் வராமல் சிரிப்புதான் வந்தது. அதேபோலத் தான் உசிலம்பட்டியில் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. புகழ்பெற்ற திரைப்பட இயக்குநரான மணிகண்டன் வீட்டில் நடைபெற்ற திருட்டுச் சம்பவம்தான் இன்று தமிழ்நாடு முழுவதும் பேசு பொருளாக உள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி எழில் நகரைச் சேர்ந்தவர் இயக்குநர் மணிகண்டன்.
இவர் காக்கா முட்டை, கடைசி விவசாயி உள்ளிட்ட திரைப்படங்களுகாக தேசிய விருது பெற்றுள்ளார். தற்போது குடும்பத்துடன் கடந்த 2 மாதங்களாக சென்னையில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில், பூட்டி இருந்த மணிகண்டன் வீட்டில் கடந்த 8 ஆம் தேதி அடையாளம் தெரியாத நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து ‘கடைசி விவசாயி’ திரைப்படத்திற்காக மத்திய அரசால் வழங்கப்பட்ட இரு தேசிய விருதுக்கான வெள்ளி பதக்கங்கள் மற்றும் 1 லட்சம் ரொக்கம் மற்றும் 5 பவுன் தங்க நகையை கொள்ளையடித்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து உசிலம்பட்டி நகர் போலிசார் வழக்கு பதிவு செய்து தொடர் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில்தான் இன்று இயக்குநர் மணிகண்டன் வீட்டில் பாலித்தீன் பை ஒன்று பெரிய கம்பில் கட்டித் தொங்கவிடப்பட்டிருந்தது. வழக்கத்திற்கு மாறாக பை ஒன்று தொங்கியதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அதனைப் பிரித்து பார்த்தனர். அதில் மணிகண்டன் வீட்டில் இருந்த திருடப்பட்ட தேசிய விருது பதக்கங்கள் வைக்கப்பட்டு அதனோடு ஒரு கடிதமும் வைக்கப்பட்டிருந்தது.
அந்த கடிதத்தில் திருடர்கள் கைப்பட எழுதிய வாசகம் ஒன்று இடம்பெற்றிருந்தது. அதில் “அய்யா எங்களை மன்னித்து விடுங்கள் உங்கள் உழைப்பு உங்களுக்கு ” என எழுதப்பட்டிருந்தது. இந்த கடிதம் தான் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்த பை குறித்து தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் தேசிய விருதுக்கான பதக்கங்களை கைப்பற்றி தொடர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதில் சுவாரஸ்யம் என்னவெனில் திருடர்கள் பாலீதீன் பையில் கட்டித் தொங்கவிட்டதில் வெறுமனே விருதுகள் மட்டுமே இருந்துள்ளது. திருடப்பட்ட ஒரு லட்சம் ரூபாய் பணமும், 5 பவுன் தங்க நகையும் திருப்பி வைக்கப்படவில்லை. இந்த செய்தி குறித்தும் திருடர்களின் கடிதம் குறித்தும் சமூக வலைதளங்களில் கிண்டலான பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர். தேசிய விருது பெற்றது மணிகண்டனின் உழைப்பு என்றால் ஒரு லட்சம் பணம் மற்றும் 5 பவுன் நகையை கொள்ளையடித்தது திருடர்களின் உழைப்பா..? என கேள்வி எழுப்பி பலர் பதிவிட்டு வருகின்றனர்.
சினிமாவில் தான் புதிய புதிய திருட்டு சம்பவங்களும், சுவாரஸ்யமான நகைச்சுவை காட்சிகளும் இடம்பெறுவது வழக்கம். ஆனால் சினிமாவை மிஞ்சும் பாணியில் தற்போது திருட்டும், அதனைத் தொடர்ந்து திருடர்களின் செயல்களும் நகைச்சுவைக்குள்ளாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.