பாடகர் #Manoவின் மகன்கள் விவகாரம் - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
மனோவின் 2 மகன்களுக்கும் நிபந்தனைகளுடன் கூடிய முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை ஆலப்பாக்கம் அருகே கால்பந்து விளையாட்டு பயிற்சி மையத்தை சேர்ந்த 16
வயது சிறுவன், உணவு வாங்க சென்ற கிருபாகரன் ஆகியோரை பாடகர் மனோவின் மகன்கள் ரஃபி, ஷாகீர் ஆகியோர் முட்டி போட வைத்து, உருட்டுக் கட்டைகளால் தாக்கியதாக புகார்
எழுந்தது. இந்த தாக்குதல் தொடர்பான வீடியோ ஆதாரமும் கிடைத்தது.
இதையடுத்து சிறுவனின் புகாரின்பேரில் ஆபாசமாக பேசுதல், தாக்குதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது திரை உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் மனோ மகன்களின் நண்பர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர்.தொடர்ந்து தலைமறைவாக இருந்த மனோவின் மகன்களை போலீசார் தேடி வந்தனர். மேலும், பாடகர் மனோவின் மகன்களான ரஃபி மற்றும் ஷாகீர் ஆகியோரை சிலர் தாக்குவது போலவும் வீடியோ வெளியானது. இது தொடர்பாகவும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையே மனோவின் 2 மகன்களும் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த போது, 2 பேருக்கும் நிபந்தனைகளுடன் கூடிய முன்ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி, மனோவின் மகன்கள் இருவரும் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் 30 நாட்கள் கையெழுத்திட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.