தொழிலாளியின் மகள் திருமணத்திற்கு வந்த சிங்கப்பூர் முதலாளிகள்! வரவேற்பளித்து முதுகுளத்தூரை அதகளம் செய்த தொழிலாளி!
மகளின் திருமணத்திற்கு வருகை புரிந்த சிங்கப்பூர் முதலாளிகளுக்கு ஊரே திரும்பி பார்க்கும் அளவுக்கு முதுகுளத்தூர் தொழிலாளி ஒருவர் வரவேற்பு கொடுத்திருக்கிறார். அதற்கு பதிலாக சிங்கப்பூர் தொழிலதிபர்களும் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.
முதலாளிகள் தங்களிடம் பணிபுரிபவர்களை தங்கள் குடும்பத்தில் ஒருத்தராக பாவிப்பதும், தொழிலாளி தனது முதலாளியின் நிறுவனத்தை தனது நிறுவனமாக நினைத்து உழைப்பையும் நேர்மையையும் செலுத்துவதும் நிகழும் போது அங்கு எப்போதும் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.
அப்படி ஒரு தொழிலாளி - முதலாளியை பற்றியதுதான் இந்த செய்தி தொகுப்பு.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை சேர்ந்தவர் செந்தூர்பாண்டியன் கடந்த 10
ஆண்டுகளுக்கு மேலாக சிங்கப்பூரில் EI corporation Ltd என்ற கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். இந்தநிலையில் செந்தூர்பாண்டியன் மகள் முகாவிஜிக்கு இன்று முதுகுளத்தூரில் உள்ள தனியார் மஹாலில் திருமணம் நடைபெற்றது.
இந்த திருமண விழாவிற்கு சிங்கப்பூரில் செந்தூர்பாண்டியன் வேலை செய்யும் நிறுவனத்தின் முதலாளிகளான கூலின், கான்மிங்க்,டிம் ஆகிய மூன்று பேருக்கு அழைப்பு விடுத்திருந்தார். இந்த அழைப்பை ஏற்ற அந்த மூவரும் இன்று (01.03.2024) திருமண விழாவில் பங்கேற்க முதுகுளத்தூருக்கு வந்தனர். அப்போது தமிழர்களின் பாரம்பரிய வேஷ்டி சட்டையில் வருகை தந்த சிங்கப்பூர் முதலாளிகளுக்கு செந்தூர்பாண்டியன் தடபுடலான வரவேற்பை அளித்தார்.
தனது முதலாளிகள் மூவரையும், முதுகுளத்தூர் பேருந்து நிலையத்திலிருந்து குதிரை சாரட்டில் ஏற்றி ஜெண்டை மேளம் முழங்க, சீர் வரிசை தட்டுளுடன் ஊர்வலமாக திருமண மண்டபத்திற்கு அழைத்து வந்தார். திருமண மண்டபத்தில் சிங்கப்பூர் முதலாளிகளுக்கு மணமகள் வீட்டின் சார்பாக ஆரத்தி எடுத்து வரவேற்றனர். அதன் பின்பு தனது தொழிலாளியின் மகள் திருமணத்திற்கு முதலாளிகள் தாலி எடுத்து கொடுக்க மணமகன் தாலி கட்டினார். பின்னர் அவர்களுக்கு சந்தனம், குங்குமம் இட்டு வாழ்த்தினர்.
இதனை அடுத்து, செந்தூர் பாண்டியன் மகள் முகாவிஜி தற்காலிகமாக பணியாற்றும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு சென்ற மூவரையும் பள்ளியின் சார்பில் பூரண கும்ப மரியாதை செய்து ஆரத்தி எடுத்து மாணவ, மாணவிகள் சிலம்பம் சுற்றியும், மலர்
தூவியும் வரவேற்றனர். அங்கு பள்ளியின் வளர்ச்சிக்காக ஒரு லட்ச ரூபாய் நன்கொடை செய்தனர்.
தன் நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியரின் மகளின் திருமணத்திற்கு வந்தது
மட்டுமல்லாமல் அவர் பணியாற்றிய பள்ளிக்கு நன்கொடை அளித்த சிங்கப்பூர்
தொழிலதிபர்களை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். இதற்கிடையில் தமிழர்களின் பாரம்பரிய விருந்தோம்பல் மற்றும் கலாச்சாரத்தை கண்டு சிங்கப்பூர் தொழிலதிபர்களும் வியப்பில் ஆழ்ந்தனர்.