ஒரே சதத்தால் பல சாதனைகளை படைத்த ஷுப்மன் கில்!
இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. ரோகித் சர்மாவின் டெஸ்ட் ஓய்வை அடுத்து இளம் வீரரான சுப்மன் கில்லுக்கு டெஸ்ட் கேப்டன் பதவி வழங்கப்பட்டது.
மான்செஸ்டரில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. முதலில் விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 358 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 669 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இங்கிலாந்தைக் காட்டிலும் 311 ரன்கள் பின் தங்கிய நிலையில், இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி ஐந்தாவது நாள் ஆட்டத்தில் விளையாடி வருகிறது. இரண்டாவது இன்னிங்ஸின் தொடக்கத்தில் ஜெயிஸ்வால் மற்றும் சாய் சுதரசன் ஆகியோர் பூஜ்ஜியம் ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். ஆனால் கேப்டன் ஷுப்மன் கில் மற்றும் கே.எல்.ராகுல் இணையானது அணியை சரிவிலிருந்து மீட்டனர். கே.எல்.ராகுல் 90 ரன்களில் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். சிறப்பாக விளையாடிய ஷுப்மன் கில் சதம் விளாசி அசத்தினார். அவர் 103 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
டெஸ்டின் இரண்டாவது இன்னிங்ஸில் சதம் விளாசியதன் மூலம் கேப்டன் ஷுப்மன் கில் பல்வேறு சாதனைகளுக்கு படைத்துள்ளார். டெஸ்ட் தொடர் ஒன்றில் அதிக சதங்கள் விளாசியவர்கள் பட்டியலில் டான் பிராட்மேன் மற்றும் சுனில் கவாஸ்கருடன் ஷுப்மன் கில்லும் இணைந்துள்ளார். கடந்த 1947-48 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரில் டான் பிராட்மேன் 4 சதங்கள் விளாசியிருந்தார். கடந்த 1978-79 ஆம் ஆண்டுகளில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரில் சுனில் கவாஸ்கர் 4 சதங்கள் விளாசியிருந்தார். அந்த வரிசையில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நான்கு சதங்கள் விளாசியதன் மூலம் ஷுப்மன் கில்லும் இந்த சாதனைப் பட்டியலில் இணைந்துள்ளார்.
மேலும், கேப்டனாக பொறுப்பேற்றுக்கொண்ட முதல் தொடரிலேயே அதிக சதங்கள் விளாசிய வீரர் என்ற சாதனைக்கும் கில் சொந்தக்காரராகியுள்ளார். . இதற்கு முன்பாக, வார்விக் ஆம்ஸ்ட்ராங், டான் பிராட்மேன், கிரேக் சேப்பல், விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித் போன்ற வீரர்கள் கேப்டனாக அறிமுகமான டெஸ்ட் தொடரிலேயே 3 சதங்கள் விளாசியதே அதிபட்சமாக இருந்தது. ஆனால் ஷுப்மன் கில் கேப்டனாக பொறுப்பேற்றுக்கொண்ட முதல் தொடரிலேயே நான்கு சதங்களை விளாசி அந்த சாதனையை முந்தியுள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் வீரரான சச்சின் டெண்டுல்கரில் சாதனையையும் அவர் முறியடித்து உள்ளார். சச்சின் டெண்டுல்கரி கடந்த 1990 ஆம் ஆண்டு மான்செஸ்டரில் சதம் விளாசியிருந்தார். அதன் பின், இந்திய டெஸ்ட் வீரர்கள் யாரும் மான்செஸ்டரில் சதம் விளாசியதில்லை. 35 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்திய வீரர் ஷுப்மன் கில் மான்செஸ்டரில் சதம் விளாசி சிறப்பான சாதனையை படைத்துள்ளார்.