ஒரு டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் குவித்த இந்திய பேட்ஸ்மேன் - ஷுப்மன் கில் சாதனை!
இந்தியா டெஸ்ட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. ரோகித் சர்மாவின் டெஸ்ட் ஓய்வை அடுத்து இளம் வீரரான சுப்மன் கில்லுக்கு டெஸ்ட் கேப்டன் பதவி வழங்கப்பட்டது. ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் நான்கு போட்டிகள் முடிவடைந்துள்ளன. முதல் நான்கு போட்டிகளில் இங்கிலாந்து 2 போட்டிகளிலும், இந்தியா 1 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது. மேலும் ஒரு போட்டி டிரா ஆனது. இந்த நிலையில் 5ஆவது போட்டி இன்று தொடங்கியது.
இந்த தொடரில் அறிமுக டெஸ்ட் கேப்டனான சுப்மன் கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். முன்னதாக 8 இன்னிங்சில் 4 சதங்களுடன் (இதில் ஒரு இரட்டை சதம் அடங்கும்) 722 ரன்கள் குவித்திருந்தார். இந்த நிலையில் இன்றைய போட்டியின் மதிய உணவு இடைவேளை வரை 15 ரன்கள் எடுத்துள்ளார். இதன் மூலம் ஒரு தொடரில் அதிக ரன்கள் குவித்த இந்திய பேட்ஸ்மேன் என்னும் சாதனையை படைத்துள்ளார். முன்னதாக கவாஸ்கர் 1979ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக 732 ரன்கள் குவித்திருந்தார். இதுதான் சாதனையாக இருந்தது. இதை தற்போது சுப்மன் கில் கவாஸ்கரின் 46 ஆண்டு கால சாதனையை முறியடித்துள்ளார். தற்போது கில் 737 ரன்கள் அடித்துள்ளார்.
முன்னதாக நடந்த நான்காவது டெஸ்ட் போட்டியில் சதம் விளாசி கேப்டனாக பொறுப்பேற்றுக்கொண்ட முதல் தொடரிலேயே அதிக சதங்கள் விளாசிய வீரர் என்ற சாதனையயும், டெஸ்ட் தொடர் ஒன்றில் அதிக சதங்கள் விளாசியவர்கள் பட்டியலில் டான் பிராட்மேன் மற்றும் சுனில் கவாஸ்கருடன் இணைந்தும் சாதனை படைத்தார். இவ்வாறு தொடர் சாதனை புரிந்து வரும் கில்லுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.