வினேஷ் போகத் தகுதி நீக்கம் கனவாக இருக்கக் கூடாதா? - ஆனந்த் மஹிந்த்ரா பதிவு!
வினேஷ் போகத் தகுதி நீக்கம் கனவாக இருக்கக் கூடாதா? என ஆனந்த் மஹிந்த்ரா பதிவிட்டுள்ளார்.
33-வது ஒலிம்பிக் திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கடந்த 26 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஒலிம்பிக் போட்டி ஆகஸ்ட் 11-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,714 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா தரப்பில் 117 வீரர் – வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இந்தியா இதுவரை 3 வெண்கல பதக்கங்களை வென்றுள்ளது தங்கமோ, வெள்ளியோ கைப்பற்றவில்லை.
பாரிஸ் ஒலிம்பிக்கில் நேற்று நடைபெற்ற மல்யுத்தப் போட்டியில் இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் களமிறங்கி, ஒரே நாளில் 3 போட்டிகளில் அடுத்தடுத்து வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். ஜப்பானைச் சேர்ந்த நம்பர் ஒன் வீராங்கனை உள்பட 3 வீராங்கனைகளின் சவாலை முறியடித்த வினேஷ் போகத் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.
இதையும் படியுங்கள் : வங்கதேச இடைக்கால அரசின் தலைவர்! யார் இந்த முகமது யூனுஸ்?
இன்று அவர் இறுதிப்போட்டியில் விளையாட இருந்த நிலையில், ஒலிம்பிக் போட்டியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 50 கிலோ எடைப்பிரிவில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள வினேஷ் போகத் போட்டிக்குரிய எடையை விட 100 கிராம் அதிகளவு இருப்பதால் அவர் தகுதி நீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், அவர் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார். இந்த அறிவிப்பு இந்திய ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.இதனால், 50 கிலோ எடைப்பிரிவில் தங்கப்பதக்கம் அமெரிக்க வீராங்கனை சாராவுக்கு வழங்கப்பட்டது. வெள்ளிப்பதக்கம் யாருக்கும் அளிக்கப்படவில்லை.
உடல் எடையை குறைக்க இரவு முழுவதும் தொடர் உடற்பயிற்சியில் ஈடுபட்டதால் நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டு இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் கடைசி நேரத்தில் துரதிர்ஷடவசமாக அவரது பதக்க வாய்ப்பு தவறிப்போன நிலையில் நாடே பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளது. பிரபலங்கள் முதல் சாதாரண நபர்கள் வரை சமூக வலைதளங்களில் இதற்கு எதிர்வினையாற்றி வருகின்றனர். அந்த வகையில் எக்ஸ் தளத்தில் மிகுந்த ஆக்டிவாக செயல்படும் பிரபல தொழிலதிபரும், மஹிந்திரா நிறுவனத்தின் தலைவருமான ஆனந்த் மஹிந்திரா தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது..
NO! NO! NO!
Please make this a bad dream that I will wake up from and find it isn’t true… https://t.co/T5BLQCkLVI
— anand mahindra (@anandmahindra) August 7, 2024
“ நோ..நோ.. யராவது இதனை கெட்ட கனவாக்குங்கள்.., இது உண்மையாக இருக்க கூடாது.” என ஆனந்த் மஹிந்த்ரா தெரிவித்துள்ளார்.