“அரசியலில் தொடர்ந்து இருக்கணுமா? எனும் எண்ணம் எழுகிறது!” -அண்ணாமலை!
சில சமயங்களில் அரசியலில் தொடர்ந்து இருக்கணுமா? என்ற எண்ணம் எழுந்துள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோவை நாடாளுமன்ற தொகுதியில் கடந்த தேர்தலில் பாஜகவிற்காக பணியாற்றிய பீப்புள்ஸ் பார் அண்ணாமலை என்ற அமைப்பு, வாய்ஸ் ஆப் கோவை என மாற்றப்பட்டுள்ளது. அந்த அமைப்பினருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கோவை குஜராத் சமாஜ் மண்டபத்தில் Modi 3.0 என்ற நிகழ்வு தன்னார்வலர்களுக்காக நடத்தப்பட்டது. இதில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், மாநில பொதுச்செயலாளர் ஏ.பி.முருகானந்தம் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை,
“தன்னார்வலர்கள் எல்லாவற்றையும் வெளிப்படையாக பேச வேண்டிய அவசியம் இல்லை. ரகசியம் என்பது ஒன்று தேவை. சிலவற்றை மூடிய அரங்கில் பரிமாறிக் கொள்ளலாம்.
தேர்தல் நேரத்தில் 17 மணிநேரம் வரை வேலை பார்த்து உள்ளீர்கள். காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று போலீஸ் விசாரித்து அனுப்பி உள்ள சம்பவங்களும் உங்களுக்கு தெரியும். நாடாளுமன்ற தேர்தல் பணியை அடுத்து மக்களின் மனநிலை, அரசியல் அனைத்தும் உங்களுக்கு தெரிய வந்திருக்கும்.
ஜனநாயகம் மெதுவாகதான் நகரும். அப்படி தான் இந்தியாவில் உள்ளது. தப்பானவர்கள் ஆட்சிக்கு வந்தாலும் 5 வருடம் கழித்து ஜனநாயகம் அவர்களை மாற்றி விடும். வாழ்க்கையில் கடந்த 3 ஆண்டுகள் மிகவும் கடினமானது. இப்போது 40 வயதாகிறது. முதல் 37 ஆண்டுகள் முடிவெடுப்பது என்பது எனக்கு சுலபமாக இருந்தது. ஆனால் அரசியல் கட்சித் தலைவர் ஆன பிறகு கடந்த மூன்று ஆண்டுகள் கடினமாக தான் இருந்தது. எதற்கும் எதிர்வினை ஆற்ற முடியாத நிலையில் இருக்கிறேன். சில சமயங்களில்
அரசியலில் தொடர்ந்து இருக்கணுமா? என்ற எண்ணம் என் மனதில் எழுந்து இருக்கிறது.
போன்றவை வேண்டும். மோடியின் வாழ்க்கையை உன்னிப்பாக கவனித்தால் தெரியும். மோடி மிகப்பெரிய பாரத்தை சுமந்து வருகிறார். கோவையில் வெற்றி தள்ளி போகியுள்ளது. தோல்வி என நினைக்க வேண்டாம். தேர்தலை ஆன்மிக பயணமாக தான் நாம் அணுகினோம். கோவையில் 4.50 ஆயிரம் வாக்குகள் மிக முக்கியமானது. நம்பிக்கை அளிக்கும் வாக்குகள் தான். நாம் வேர்களை பலப்படுத்தி வருகிறோம். 33% பூத்துகளில் முதல் அல்லது 2வது இடத்திற்கு வந்துள்ளோம்.
நம்ம செய்யக்கூடிய வேலை தொடர்ந்து செய்ய வேண்டும். அரசியலில் ஒரு கலை என்றால் அது சமரசம் செய்வது தான். தினமும் கத்தி சண்டை போட முடியாது. 5 வது கியரில் போக கூடாது. போனால் கியர் பாக்ஸ் போயிரும். நல்லவங்களுக்கு தான் பிரச்சனை வரும். எல்லாரும் அவர்கள் கோணத்தில் சரியனாவர்கள் தான். தனித்தன்மை இழக்காமல் இருக்க வேண்டும் என்றால் கட்சியில் இணையாமல் செயல்பட வேண்டும். அப்போது மக்கள் மத்தியில் மரியாதை கிடைக்கும்.
வாய்ஸ் ஆப் கோவை அமைப்பின் தனித்தன்மை இழக்காமல் செயல்படுங்கள். தனிமனிதனாக சமுதாயத்திற்கு வேலை செய்து கிடைக்கும் மகிழ்ச்சி, எதற்கும் ஈடாகாது. எனக்கும் உங்களை பாஜகவில் இணைக்க வேண்டும் என்று ஆசை தான். பாஜகவில் இணைக்க வேண்டாம் என்பதால் உங்களை தள்ளி வைக்கிறேன். ஒரு கட்டத்திற்கு மேல் பாஜக எனும் அடையாளம் உங்களுக்கு இருந்தால் அது உங்கள் வளர்ச்சியை பாதிக்கும். தன்னார்வலர்கள் உங்கள் தனித்துவத்தை இழக்க கூடாது. எங்களுக்கு அறிவுரை சொல்லும் வேலை உங்களுக்கு இருக்கிறது. நாங்கள் சோர்வடையும் போது நேர்மையாக இருங்கள் என கூற எங்களுக்கு நீங்கள் இருக்க வேண்டும். Voice of Covai பயணம் தேசியத்துடன் பயணிக்க வேண்டும்” என பேசினார்.