ரவுடி என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை - நேரில் ஆய்வு செய்த பின் திருச்சி எஸ்பி பேட்டி.!
ரவுடி என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் நேரில் ஆய்வு செய்த பின் காவல் கண்காணிப்பாளர் செய்தியாளர்களை சந்தித்தார்.
திருச்சி மாவட்டம் சனமங்கலம் அருகே பிரபல ரவுடி ஜெகன் என்கவுண்டர் செய்யப்பட்ட நிலையில் திருச்சி சிறுகனூர் காவல் நிலையத்தில் காவல் கண்காணிப்பாளர் வருண் குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் தெரிவித்ததாவது..
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள பனையகுறிச்சி யை சேர்ந்தவர் ஜெகன் என்கிற கொம்பன் ஜெகன் (30). இவர் மீது தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் கொலை, அடிதடி மற்றும் கொள்ளை உள்ளிட்ட 53 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதனைத்தொடர்ந்து கூலிப்படையாகவும் ஜெகன் செயல்பட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் திருச்சி மாவட்டம், சிறுகனூர் அருகே சனமங்கலம் வனப்பகுதியில் நள்ளிரவு நேரங்களில் ஆடு மற்றும் பன்றி வளர்க்கும் தொழிலாளர்களிடம் மர்ம நபர்கள் சிலர் கத்தியை காட்டி மிரட்டி ஆடு மற்றும் பன்றிகளை பறித்து செல்வதாக திருச்சி குற்ற ரவுடிகள் கண்காணிப்பு சிறப்பு தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் உத்தரவின் பேரில் காவல் ஆய்வாளர் கருணாகரன் தலைமையில் காவல் உதவி ஆய்வாளர் வினோத், கார்த்தி தலைமை காவலர்கள் அறிவழகன் மற்றும் பிரெட்ரிக் வசந்த் உள்ளிட்ட தனிப்படை போலீசார் சனமங்கலம் வனப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
வனப்பகுதியில் பதுங்கியிருந்த ரவுடி ஜெகன் போலீசாரை பார்த்ததும் ஓட முயன்றபோது அவரை போலீசார் விரட்டி பிடிக்க முயன்றனர். இந்த சம்பவத்தின்போது போலீசாருக்கும் ரவுடி ஜெகன் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது ரவுடி ஜெகன் போலீசார் மீது பெட்ரோல் நாட்டு சணல் வெடிகுண்டு குண்டு வீசியுள்ளார். இதில் தப்பித்த போலீசார் மீண்டும் ஜெகனை பிடிக்க முயன்றபோது அரிவாளால் போலீசாரை ரவுடி ஜெகன் தாக்கியுள்ளார்.
இதில் காவல் உதவி ஆய்வாளர் வினோத் இடது கையில் அரிவாள் வெட்டுப்பட்டு படுகாயம் அடைந்துள்ளார். இதனைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் தற்காத்துக் கொள்வதற்காக ரவுடி கொம்பன் ஜெகன் மீது இரண்டு முறை துப்பாக்கிச்சூடு நடத்தினர். ஜெகன் சிறையில் இருக்கும் போது அவருக்கு நிறைய தொடர்பு கிடைத்துள்ளது அதன் மூலம் பல பேரை மிரட்டி பணம் பறிக்கும் செயல் ஈடுபடக்கூடிய ஒரு கேங்ஸ்டர் ஆக இருந்து வந்துள்ளார்.
அதனால் இவர் A+ பிரிவில் ரவுடியாகவும் கேங் லீடராகவும் இருந்து உள்ளார். கடந்த 20 நாட்களுக்கு முன்பாக இவருடைய கூட்டாளிகள் எட்டு பேர் கைதாகி உள்ளார்கள். தொடர்ச்சியாக A+பிரிவில் உள்ள ரவுடிகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். அவர்கள் ஏதேனும் குற்ற சம்பவங்கள் ஈடுபட்டால் உடனடியாக குண்டாஸ் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
கடந்த 3நாட்களுக்கு முன்பு வேறு ஒரு குற்ற வழக்கில் ஒரு முக்கிய ரவுடியை கைது செய்துள்ளோம். குண்டாஸ் உடைய காலம் ஒரு வருடம் தான் அதன்பின்னர் அவர்கள் வெளியே வந்து மீண்டும் குற்ற செயலில் ஈடுபடுகிறார்கள். அங்கே சென்ற காவலர்களுக்கு துப்பாக்கி வைத்திருப்பார் என்று தெரியவில்லை அதன் பிறகு சிறுகனூர் ஆய்வாளர் சென்று பார்த்த போது தான் துப்பாக்கி இருப்பது தெரிய வந்தது.” என தெரிவித்தார்.