மும்பையில் நடிகர் சல்மான் கானின் வீட்டின் அருகே துப்பாக்கிசூடு சம்பவம்!
நடிகர் சல்மான்கான் வீட்டுக்கு வெளியே துப்பாக்கி சூடு நடந்ததாக செய்தி வெளியாகியுள்ளது.
பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக இருந்து வரும் முக்கிய நடிகர் சல்மான் கான். இவர் மும்பையில் உள்ள பாந்த்ராவில் இருக்கும் தனது வீட்டில் தற்போது தங்கி இருக்கிறார். இந்நிலையில் இன்று காலை 5 மணி அளவில் துப்பாக்கிகளால் சுட்டவாறு சல்மான்கானின் வீட்டிற்கு வெளியே சத்தம் கேட்டுள்ளது. மொத்தமாக மூன்று முறை துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிய வந்துள்ளது.
துப்பாக்கி சத்தம் கேட்டதும் அப்பகுதி மக்கள், இந்த விஷயம் தொடர்பாக பாந்த்ரா காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் நிகழ்விடத்திற்கு விரைந்து வழக்குப்பதிவு செய்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இரண்டு மர்ம நபர்கள் அதிகாலை நேரத்தில் துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகரின் வீட்டிற்கு வெளியே மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியது எதற்காக? என்ற பரபரப்பு அங்குள்ள வட்டாரங்களில் தொற்றிக் கொண்டுள்ளது.
இந்த விஷயம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். என்டிடிவி மற்றும் ஏஎன்ஐ நிறுவனத்தின் செய்திக்குறிப்புபடி, சல்மான் கானின் வீட்டிற்கு வெளியே துப்பாக்கி சூடு நடந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தற்போது வரை யாருக்கும் காயம் அல்லது உயிரிழப்பு போன்ற பாதிப்பு ஏற்பட்டுள்ளதா? என்ற விபரங்கள் தெரியவில்லை.