திருநெல்வேலியில் காவலரைத் தாக்கிய சிறுவன் மீது துப்பாக்கிச்சூடு!
திருநெல்வேலி மாவட்டம், பாப்பாகுடி அருகே இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலைத் தடுக்கச் சென்றபோது, உதவி ஆய்வாளர் ஒருவரை வெட்ட முயன்ற 17 வயது சிறுவன் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இந்நிகழ்வு நள்ளிரவு 11 மணியளவில் நடந்துள்ளது.
பாப்பாகுடியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த உதவி ஆய்வாளர் முருகன் மற்றும் அவருடன் இருந்த இரண்டு காவலர்கள், இருதரப்பினரிடையே நடந்த மோதலைக் தடுக்கச் சென்றுள்ளனர்.
அப்போது, ஒரு வீட்டின் உள்ளே இருந்த காவல்துறையினரை நோக்கி, 17 வயது சிறுவன் ஒருவன் அரிவாளால் தாக்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவரவும், தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும், முயற்சித்துள்ளனர். அப்போது அவர்களால் நிலைமையை சமாளிக்க முடியாததால் சிறுவன் மீது காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
இந்த துப்பாக்கிச்சூட்டில் சிறுவனின் வயிற்றுப் பகுதியில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவனைப் பிடித்து திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
மேலும் சிறுவனின் உயிருக்கு ஆபத்தில்லை என ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிகழ்வு குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.