டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கி சூடு! - உலக தலைவர்கள் கண்டனம்!
அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் மீதான துப்பாக்கி சூடுக்கு உலக தலைவர்கள் பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் இந்த ஆண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதன் காரணமாக அங்கு தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. மீண்டும் அதிபர் வேட்பாளராக தற்போதைய அதிபர் ஜோ பைடன் களமிறங்கியிருக்கும் சூழலில், அவரை எதிர்த்து அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் போட்டியிடுவதால், மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. ட்ரம்ப் தீவிரமாகப் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் உள்ள பட்லர் நகரில் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தனது ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போதுதான் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் டொனால்ட் ட்ரம்பின் வலது காது பகுதியில் காயம் ஏற்பட்டது. பின்னர், பாதுகாவலர்கள் அவரை மேடையிலிருந்து மீட்டு அழைத்துச் சென்றனர். காயமடைந்த டொனால்ட் ட்ரம்ப் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதையும் படியுங்கள் : பயணிகள் கவனத்திற்கு – சென்னை மின்சார ரயில் சேவையில் மாற்றம்!
ட்ரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் மீது சிறப்பு பாதுகாப்புப் படை நடத்திய பதில் தாக்குதலில் அந்த நபர் உயிரிழந்தார். பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், அரசியல் தலைவர்கள் பலரும் இந்தச் சம்பவத்துக்குக் கடும் கண்டனங்களைத் தெரிவித்திருக்கின்றனர்.
அந்த வகையில், அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவத்திற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது கண்டனத்தினை பதிவு செய்துள்ளார். அதில், "டொனால்ட் டிரம்பின் பேரணியில் நடந்த துப்பாக்கிச் சூடு குறித்து பற்றி அறிந்தேன். இது போன்ற வன்முறைகளுக்கு அமெரிக்காவில் ஒருபோதும் இடம் கிடையாது. டிரம்ப் மீதான தாக்குதலை கண்டிக்க வேண்டியது அவசியம். தற்போது, அவர் பாதுகாப்பாகவும் சிறப்பாகவும் இருக்கிறார் என்பதைக் கேட்பதற்கு நிம்மதியளிக்கிறது" இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
துணை அதிபர் கமலா ஹாரிஸ் இந்த சம்பவம் தொடர்பாக தனது கண்டனத்தை தெரிவித்துள்ளர். அதில்," இந்தத் தாக்குதலில் டிரம்ப் பெரிய அளவில் காயமடையவில்லை, நலமாக இருக்கிறார் என்பதைக் கேட்டு ஆறுதல் அடைந்தேன். இதுபோன்ற வன்முறைக்கு நம் நாட்டில் இடமில்லை. இந்த வெறுக்கத்தக்க செயலை நாம் அனைவரும் கண்டிக்க வேண்டும். இது மேலும் வன்முறைக்கு வழிவகுக்காமல் இருக்க நாம் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.
உலக பெரும் பணக்காரரான எலான் மஸ்க், இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். எலான் மஸ்க் இது தொடர்பாக கூறுகையில், "டொனால்டு டிரம்பிற்கு எனது முழு ஆதரவை அளிக்கிறேன். அவர் உடனடியாக உடல் நலம் தேற வேண்டும். இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்று உளவுத்துறையின் தலைவரும், இந்த கூட்டத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டவரும் ராஜினாமா செய்ய வேண்டும்" என தெரிவித்தார்.
மேலும், "அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீதான கொலை முயற்சி கவலையளிக்கிறது. இத்தகைய செயல்கள் கடுமையாக கண்டிக்கப்பட வேண்டும். அவர் விரைவில் பூரண குணமடைய வேண்டுகிறேன்" என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எம்.பி தனது கண்டனத்தை தெரிவித்தார்.