மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் சோதனை செய்யப்பட்ட விவகாரம் - தமிழ்நாடு டிஜிபியிடம் புகார்!
மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 35 பேர் அத்துமீறி நுழைந்ததாக மதுரை அமலாக்கத்துறை உதவி இயக்குநர் பிரிஜிஸ் பினிவால் தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவாலிடம் புகார் அளித்துள்ளார்.
சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக திண்டுக்கல் மருத்துவரிடம் லஞ்சம் பெற்ற அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி திண்டுக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அங்கித் திவாரி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மதுரையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் கடந்த டிச.1ம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர்.
இந்நிலையில், இந்த சோதனை தொடர்பாக மதுரை அமலாக்கத்துறை உதவி இயக்குநர் பிரிஜிஸ் பினிவால் தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவாலிடம் புகார் அளித்துள்ளார். அப்புகாரில் அவர், எந்தவித தகவலையும் தெரிவிக்காமல் அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பல்வேறு சோதனைகளை நடத்தியதாக குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும் அங்கித் திவாரி அறைக்கு சென்று சட்டவிரோதமாக பல்வேறு ஆவணங்களை பறிமுதல் செய்து கொண்டு சென்றதாகவும், பல்வேறு வழக்கு ஆவணங்கள் தொடர்பாக நகல்கள் எடுத்துக் கொண்டு சென்றதாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது. மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் சோதனை மேற்கொள்ள 6 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், 35 பேர் சோதனையில் ஈடுபட்டது தெரிய வந்ததாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அலுவலகத்தில் சோதனையில் ஈடுபட்ட நபர்கள் காவல்துறையினரா அல்லது தனி நபர்களா என தெரியவில்லை என்றும், தமிழகத்தில் முக்கிய புள்ளிகளின் வழக்குகளை விசாரித்து வரும் மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் இதுபோன்று அடையாளத்தை குறிப்பிடாத பல நபர்கள் உள்ளே நுழைந்து சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் பல முக்கிய ஆவணங்களை நகலெடுத்தது, பறிமுதல் செய்ததது, எலக்ட்ரானிக் ஆவணங்களை எடுத்துக் கொண்டு சென்றது மற்றும் 35 பேர் சட்டவிரோதமாக சோதனையில் ஈடுபட்டது தொடர்பான வீடியோ பதிவுகள் இருப்பதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, சம்பந்தப்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் மற்றும் அடையாளப்படுத்தப்படாத 35 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமலாக்கத்துறை மதுரை மண்டல உதவி இயக்குனர் பிரிஜிஸ் பினிவால் தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவாலிடம் புகாரில் தெரிவித்துள்ளார்.