குமரியில் அதிர்ச்சி - மாணவிகளைப் பாலியல் வன்கொடுமை செய்த கராத்தே ஆசிரியர் கைது!
குமரி மாவட்டம், புதுக்கடை அருகே உள்ள தொலையாவட்டம் பகுதியில், கராத்தே பயிற்சி அகாடமி நடத்தி வந்த ஜெயின் மிலாடு (46) என்பவர், தனது மாணவிகள் இருவரைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயின் மிலாடு நடத்தி வந்த அகாடமியில், அப்பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் பலர் கராத்தே பயின்று வருகின்றனர். இவரிடம் பயிற்சி பெற்று வந்த 9ஆம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பு படிக்கும் இரு சகோதரிகள், வழக்கம்போல் பயிற்சிக்குச் சென்று வீடு திரும்பியுள்ளனர்.
அப்போது, இளைய சகோதரி சோகமாக இருந்ததால், அவரது பெற்றோர் விசாரித்துள்ளனர். விசாரணையில், கராத்தே ஆசிரியர் 'குட் டச், பேட் டச்' குறித்துப் பாடம் நடத்துவதாகக் கூறி, தனது பாழடைந்த வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்த மாணவி தெரிவித்துள்ளார்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், மூத்த மகளிடம் விசாரித்தபோது, அவரும் அதே ஆசிரியர் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறியுள்ளார். "பாதுகாப்பிற்காகத் தற்காப்புக் கலை பயில அனுப்பிய இடத்தில், பெண் குழந்தைகளுக்குப் பாதுகாப்பில்லை" என்று ஆவேசமடைந்த அவர்களின் தாய், குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார், கராத்தே ஆசிரியர் ஜெயின் மிலாடு மீது போக்சோ உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். "வேலியே பயிரை மேய்ந்த" இந்தச் சம்பவம், அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.