அதிமுகவுக்கு அதிர்ச்சி - அதிமுகவின் மூத்த தலைவர் திமுகவில் இணைந்தார்!
அண்மையில் தமிழ்நாடு அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய அதிமுக அமைப்புச் செயலாளர் அன்வர் ராஜா, திமுகவில் இணைத்துக் கொண்டதை தொடர்ந்து, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.
முன்னாள் எம்.பி.யும், அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவருமான அன்வர் ராஜா, சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், "தமிழ்நாட்டில் பாஜக ஒருபோதும் காலூன்ற முடியாது" என்று தெரிவித்தார். அதிமுக - பாஜக கூட்டணி குறித்த பல்வேறு ஊடகங்கள் நிலவி வந்த சூழலில், அதிமுகவின் முக்கியப் பொறுப்பில் இருந்த ஒருவரின் இத்தகைய கருத்து, அரசியல் வட்டாரத்தில் விவாதப் பொருளாக மாறியது.
இது அதிமுக தலைமைக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்பட்டது. இந்தக் கருத்தின் எதிரொலியாக, இன்று காலை அன்வர் ராஜா சென்னை அண்ணா அறிவாலயத்திற்குச் சென்றார். அங்கு, திமுக தலைவர் மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், அவர் தன்னை திமுகவில் அதிகாரப்பூர்வமாக இணைத்துக் கொண்டார். இதன் மூலம், அதிமுகவில் தனது 30 ஆண்டுகளுக்கும் மேலான அரசியல் பயணத்தை அன்வர் ராஜா முடித்துக் கொண்டார்.
இந்நிலையில் அன்வர் ராஜா திமுகவில் இணைந்த தகவல் வெளியான சில நிமிடங்களிலேயே, அதிமுக தலைமை அவரது மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது. கட்சியின் கொள்கை, கோட்பாடுகளுக்கும், கட்டுப்பாட்டிற்கும் முரணாகச் செயல்பட்டதாலும், கட்சிக்கு அவப்பெயர் உண்டாக்கும் விதமாகச் செயல்பட்டதாலும், அன்வர் ராஜா அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நீக்கப்படுவதாக அதிமுக தலைமை அறிவித்தது.
இந்த அதிரடி நடவடிக்கை, அதிமுக - பாஜக உறவில் நிலவும் விரிசலை மேலும் வெளிப்படுத்தியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.