இடிந்து விழுந்த #ChhatrapatiShivajiStatue... ஒப்பந்ததாரர் மீது வழக்குப்பதிவு!
சத்ரபதி சிவாஜியின் சிலை நிறுவப்பட்டு ஒரு ஆண்டுக்குள் இடிந்து விழுந்த விவகாரத்தில், ஒப்பந்ததாரர் மற்றும் கட்டமைப்பு ஆலோசகர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா சிந்துதுர்க் மாவட்டம் மால்வானில் உள்ள ராஜ்கோட் கோட்டையில் மராத்திய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலையை கடந்த ஆண்டு டிசம்பர் 4-ம் தேதி கடற்படை தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி சிலையை திறந்து வைத்தார். இந்த 35 அடி உயரமுள்ள சிவாஜி சிலை நேற்று (ஆக. 26) இடிந்து விழுந்தது. கடந்த 3 நாள்களாக அப்பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்த நிலையில், சிலை உடைந்ததற்கான காரணத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
காவல்துறை, மாவட்ட நிர்வாகத்தின் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து நிலைமையை ஆய்வு செய்து, சேதம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்த சத்ரபதி சிவாஜியின் சிலை உடைந்த விவகாரத்தில் பாஜக ஆட்சியில் ஊழல் உச்சத்தில் இருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியது.
இந்த சம்பவம் குறித்து அந்த மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே பேசும்போது, சிலை இடிந்து விழுந்ததற்கான சரியான காரணத்தை கண்டுபிடிப்பதாகவும் அவர் உறுதியளித்தார். அதே இடத்தில் சத்ரபதி சிவாஜி மகாராஜின் சிலையை மீண்டும் நிறுவ அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் கூறினார்.
இந்த நிலையில், இந்த சிலை உடைந்து விழுந்த சம்பவத்தில் சிலையை கட்டிய ஒப்பந்ததாரர் மற்றும் கட்டமைப்பு ஆலோசகர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து சிந்துதுர்க் காவல்துறையினர் கூறும்போது, "சத்ரபதி சிவாஜி மகாராஜ் சிலை உடைந்து விழுந்த சம்பவத்தில் ஒப்பந்ததாரர் ஜெய்தீப் ஆப்தே மற்றும் கட்டமைப்பு ஆலோசகர் சேத்தன் பாட்டீல் ஆகியோர் மீது பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்) பிரிவுகள் 109, 110, 125, 318, மற்றும் 3(5) ஆகியவற்றின் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.