“ஷேக் ஹசீனா டெல்லியில் சிறிது காலம் தங்கப் போகிறார்” - மகன் சஜீப் வசேத் ஜாய் பேட்டி!
இந்தியாவில் இருந்து அடுத்து எங்கு செல்வது என்பது குறித்து தனது அம்மா ஷேக் ஹசீனா இன்னும் முடிவு செய்யவில்லை என்று அவரது மகன் சஜீப் வசேத் ஜாய் தெரிவித்துள்ளார்.
வங்கதேசத்தில் விடுதலை போரில் பங்கேற்றவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு அரசு வேலையில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதை எதிர்த்து போராட்டம் வெடித்தது. இந்த போராட்டம் நாளடைவில் கலவரமாக மாறியது. இந்த கலவரத்தில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நிலைமை மோசமானதை அடுத்து அந்நாட்டின் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, இந்தியாவில் தஞ்சமடைந்தார்.
இதனையடுத்து அந்நாட்டு நாடாளுமன்றத்தை அதிபர் முகமது ஷஹாபுதீன் கலைத்து உத்தரவிட்டார். இடைக்கால அரசு அமைப்பது குறித்து முப்படைகளின் தலைவர்கள் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் குழுக்களின் பிரிதிநிதிகள் கொண்ட 13 பேருடன் நேற்று (ஆக. 6) அந்நாட்டு அதிபர் ஷஹாபுதீன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் நோபல் பரிசு வென்ற பொருளாதார நிபுணர் முகமது யூனுஸை இடைக்கால தலைவராக நியமிக்க முடிவு எடுக்கப்பட்டது.
இந்நிலையில், இந்தியாவில் இருந்து அடுத்து எங்கு செல்வது என்பது குறித்து தனது அம்மா ஷேக் ஹசீனா இன்னும் முடிவு செய்யவில்லை என்று அவரது மகன் சஜீப் வசேத் ஜாய் தெரிவித்துள்ளார்.ஜெர்மனி செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர், “வங்கதேசத்தின் பிரதமராக 5 முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர் எனது அம்மா. அவரும் அவரது குடும்பத்தினரும் யாருக்காக இவ்வளவு செய்தார்களோ, அந்த நபர்கள் தாக்குதலை நடத்துவார்கள் என்றும், அதன் காரணமாக அங்கிருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்படும் என்றும் அவரால் நம்ப முடியவில்லை. அவர் மிகுந்த மன வருத்தத்தில் உள்ளார்” என தெரிவித்தார்.
தொடர்ந்து, அமெரிக்கா அல்லது பிரிட்டனில் புகலிடம் பெறுவதற்கு ஷேக் ஹசீனா திட்டமிட்டுள்ளாரா என்ற செய்தியாளரின் கேள்விக்கு பதில் அளித்த சஜீப் வசேத் ஜாய், "இதெல்லாம் வதந்திகள். அவர் இன்னும் அது குறித்து முடிவு எடுக்கவில்லை. அவர் டெல்லியில் சிறிது காலம் தங்கப் போகிறார். எனது சகோதரி எனது அம்மாவுடன் இருக்கிறார். அதனால், அவர் தனியாக இல்லை. எனது அம்மா வங்கதேசத்திலிருந்து வெளியேற விரும்பாததால் நான் மிகவும் கவலைப்பட்டேன். நாங்கள் அவரை சமாதானப்படுத்த வேண்டியிருந்தது. வங்கதேசத்தில் நடந்த போராட்டம் என்பது அரசியல் இயக்கம் அல்ல. அது ஒரு கும்பல்" என தெரிவித்தார்.
ஷேக் ஹசீனா நாட்டைவிட்டு வெளியேற ராணுவமோ அல்லது வேறு யாராவது காலக்கெடு நிர்ணயித்தார்களா என்ற கேள்விக்கு, "அத்தகைய காலக்கெடுவை யாரும் வழங்கவில்லை. ஆனால் எதிர்ப்பாளர்கள் பிரதமரின் இல்லத்தை அடைவார்கள் என்பது தொடர்பாக ஒரு நேர மதிப்பீடு இருந்தது. எனவே காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. ஆனால், இந்த காலக்கெடுவிற்குள் அவர் அங்கிருந்து வெளியேறாவிட்டால் பிறகு வெளியேறி இருக்க முடியாது" என தெரிவித்தார்.
நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் முஹம்மது யூனுஸ் இடைக்கால அரசாங்கத்தின் தலைமை ஆலோசகராக இருப்பார் என்பது குறித்த கேள்விக்கு, "அதில் எனக்கு எந்தக் கருத்தும் இல்லை. அவர் எப்படி நாட்டை வழிநடத்துகிறார் என்பதைப் பார்க்க விரும்புகிறேன். ஒரு நாட்டை வழிநடத்துவது அவ்வளவு எளிதானது அல்ல. சூறையாடுதல் நடைபெறுவதை ஊடகங்கள் மூலம் பார்க்க முடிகிறது. சிரியாவைப் போன்றே நிலைமை காணப்படுகிறது. நாடு எப்படி முன்னேறும் என்று எனக்குத் தெரியவில்லை. வங்கதேசத்தின் நிலைமை பாகிஸ்தானைப் போல இருக்கும் என்று எனக்குத் தோன்றுகிறது. ஷேக் ஹசீனாவின் ஆட்சி வங்கதேசத்தின் பொற்காலம் என்று மக்கள் விரைவில் கூறத் தொடங்குவார்கள்" என தெரிவித்துள்ளார்.