“சமூக சேவைக்காக நினைவுகூரப்படுவார்” - குமரி அனந்தன் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்!
காங்கிரஸ் மூத்த தலைவரும், பாஜக மூத்த தலைவர் மிழிசை சௌந்தரராஜனின் தந்தையான குமரி அனந்தன் (93) வயது மூப்பு காரணாமாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தார். அண்மையில் இவர் சிறுநீர் பிரச்னை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று(ஏப்ரல்.09) காலமானார். தொடர்ந்து அவரது உடல் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள தமிழிசை சௌந்தரராஜன் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
அவரது உடலுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதனிடையே தொலைபேசி வாயிலாக உள்துறை அமைச்சர் அமித் ஷா இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், தவெக தலைவர் விஜய் உள்ளிட்ட பலர் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் குமரி அனந்தன் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “குமரி அனந்தன், மதிப்புமிகு சமூக சேவைக்காகவும், தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கான ஆர்வத்திற்காகவும் நினைவுகூரப்படுவார். தமிழ் மொழியையும், கலாச்சாரத்தையும் பிரபலப்படுத்துவதற்காகவும் அவர் பல முயற்சிகளை மேற்கொண்டார். அவரது மறைவு வேதனையளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும், தொண்டர்களுக்கும் இரங்கல்கள். ஓம் சாந்தி"
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.