“மொட்டைய நா போட்ர”... சிறுத்தை பட பாணியில் 100க்கும் மேற்பட்டோருக்கு மொட்டையடித்து மோசடி - வழக்கறிஞருக்கு போலீசார் வலைவீச்சு!
ஹைதராபாத்தின் பழைய நகரத்தில், டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் 8 நாட்களில் மீண்டும் முடி வளரும் எனக்கூறி நூற்றுக்கணக்கான இளைஞர்களை ஏமாற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதரபாத்தின் பழைய நகரத்தில் உள்ள ஃபதே தர்வாசாவில் அமைந்துள்ள ஒரு சலூனில், 8 நாட்களில் முடி வளர்வதற்கு இலவசமாக மூலிகை மருந்து தருவதாக விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மூலிகை மருந்து வழுக்கை தலையில் கூட 8 நாட்களிலேயே முடி வளர உதவும் எனவும் தெரிவித்துள்ளனர். டெல்லியைச் சேர்ந்த முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர் ஒருவர் இந்த சிகிச்சையின் மூலம் மீண்டும் முடி வளர்த்ததாகவும் கூறி விளம்பரப்படுத்தியுள்ளனர்.
இதனால் அந்த சலூனை "பிக் பாஸ் சலூன்" எனவும் அழைத்துள்ளனர். இணையத்தில் இந்த சலூன் பிரபலமடைந்ததை தொடர்ந்து பலரும் ரூ.200 கொடுத்து மொட்டையடித்துக் கொண்டு அந்த மூலிகை மருந்தை தலையில் தடவியுள்ளனர்.
ஆனால் அந்த மூலிகை மருந்தை தடவியதற்கு பிறகு பலருக்கு தலையில் தோல் வெடிப்புகள், தீக்காயங்கள் மற்றும் கொப்புளங்கள் வந்துள்ளன. இதனையடுத்து பலரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர். வழக்கறிஞர் குறித்து உள்ளூர் போலீசாருக்கு ஏராளமான புகார்கள் சென்ற நிலையில் போலீசார் இதுதொடர்பாக விசாரணையை தொடங்கியுள்ளனர். இதனையறிந்த வழக்கறிஞர் சலூனை மூடிவிட்டு தலைமறைவாகியுள்ளார்.