For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

திருநள்ளாறில் நாளை சனிப்பெயர்ச்சி விழா!

03:06 PM Dec 19, 2023 IST | Web Editor
திருநள்ளாறில் நாளை சனிப்பெயர்ச்சி விழா
Advertisement

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் நாளை (டிச.20) மாலை சனிப்பெயர்ச்சி விழா வழிபாடு நடைபெறவுள்ளது.  

Advertisement

காரைக்கால் மாவட்டம்,  திருநள்ளாறு ஸ்ரீ பிரணாம்பிகை சமேத ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் தனி சன்னதி கொண்டு ஸ்ரீ சனீஸ்வரபகவான் அபய முத்திரையுடன்,  அனுக்கிரக மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.  வாக்கிய பஞ்சாங்கத்தின்படி மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு நாளை (டிச.20) மாலை 5.20 மணிக்கு பெயர்ச்சியாவதைக் குறிப்பிடும் வகையில் ஸ்ரீ சனீஸ்வர பகவானுக்கு அபிஷேகம் செய்து சிறப்பு ஆராதனைகள் நடைபெறவுள்ளன.

சனிப்பெயர்ச்சி விழாவில் தரிசனம் செய்ய நளன் தீர்த்தக் குளத்துக்குச் செல்லும் வழியில் உள்ள வரிசை வளாகத்திலிருந்து கட்டணமில்லாமல் தரிசனம் செய்ய செல்லும் வரிசை அமைப்பு உள்ளது.  வளாகத்துக்கு வெளியே கூடுதலாகத் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இது தவிர, கட்டண தரிசனமாக ரூ.300, ரூ.600, ரூ.1,000 என நிர்ணயம் செய்து திருநள்ளாறு பகுதியில் பல இடங்களில் டிக்கெட் வழங்கும் மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஆன்லைன் மூலமாக கோயில் நிர்வாக இணையதளத்தில் பதிவு செய்யும் வசதி செய்யப்பட்டுள்ளது.  பக்தர்கள் கோயிலின் தெற்கு வீதி, கீழவீதி வழியாகவும், தெற்கு வீதியிலிருந்து யானையடி மூலமாகவும் கட்டண வரிசை கோயிலுக்குள் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கட்டண வரிசை எங்கிருந்து தொடங்குகிறது என்பதை அறிய, ஆங்காங்கே கியூஆர் கோடு அட்டை பக்தர்களின் பார்வை படும் வகையில் வைக்கப்பட்டுள்ளன.

இதையும் படியுங்கள்: வெள்ள பாதிப்பு – தூத்துக்குடியில் நிவாரண பொருட்களை வழங்கினார் எடப்பாடி பழனிசாமி!

சனிப்பெயர்ச்சி நாளான டிச.20-ம் தேதி 24 மணி நேரமும் சுவாமி தரிசனம் செய்ய கோயில் நடை திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.   பாதுகாப்புப் பணியில் புதுச்சேரியிலிருந்து 1,500 போலீசார், காரைக்கால் போலீசார் மற்றும் தன்னார்வலர்கள் என ஏறக்குறைய 2,000 பேர் பணியமர்த்தப்படுகின்றனர்.  வெளியூரிலிருந்து வரும் பக்தர்களுக்காக 120 இடங்களில் தற்காலிக நடமாடும் கழிப்பறைகளும், 150- க்கும் மேற்பட்ட நிரந்தர கழிப்பறை வளாகமும் உள்ளது.

நளன் தீர்த்தக் குளத்தில் திரளான பக்தர்கள் நீராடுவார்கள் என்பதால், குளத்தின் மையப் பகுதிக்குச் செல்லாத வகையில் சுற்றிலும் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் படகு மூலம் கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  காரைக்கால் பகுதியிலிருந்து பக்தர்கள் திருநள்ளாறு செல்ல போக்குவரத்துத்துறை சார்பில் இலவச பேருந்துகள் டிச.20-ம் தேதி காலை 6 மணி முதல் 21-ம் தேதி காலை 6 மணி வரை இயக்கப்படுகின்றன.

புதுச்சேரியிலிருந்து வந்த வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் திருநள்ளாறு கோயில் பகுதியிலும், வெளியிடங்களிலும் சோதனை நடத்தினர்.  முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர் மணிஷ் தலைமையில் புதுச்சேரியிலிருந்து வந்த போலீசார் மற்றும் காரைக்கால் போலீசாருக்கு விழாவின்போது போலீசாரின் கடமைகள் குறித்து விளக்கப்பட்டது.

கண்காணிப்புக் கேமராக்கள் 150-க்கும் மேற்பட்ட இடங்களில் வைக்கப்பட்டு கோயில் வளாகம் மற்றும் காவல்நிலையத்தில் கட்டுப்பாட்டு அறை அமைத்துக் கண்காணிக்கப்படுகிறது.  வரிசையில் செல்லும் பக்தர்களுக்கு உணவு, ரொட்டி, குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  பல்வேறு அன்னதானக் குழுவினர் செவ்வாய்க்கிழமை முதல் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க தொடங்கியுள்ளனர்.

சனிப்பெயர்ச்சி விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோயில் நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது. பக்தர்கள் அச்சமின்றி திருநள்ளாறு வந்து தரிசனம் செய்யலாம். தேவையான பாதுகாப்பு மற்றும் விரைவான தரிசனத்துக்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags :
Advertisement