‘சகுனி’ பட இயக்குநர் சங்கர் தயாள் மாரடைப்பால் மரணம்!
கார்த்தி நடித்த ‘சகுனி’ படத்தின் இயக்குநர் சங்கர் தயாள் மாரடைப்பால் காரணமானார்.
நடிகர் கார்த்தியை வைத்து ‘சகுனி’ படத்தை இயக்கிய இயக்குநர் சங்கர் தயாள் (47) மாரடைப்பால் இன்று காலமானார். நுங்கம்பாக்கத்தில் பத்திரிகையாளர் சந்திப்புக்கு வந்தபோது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
கார்த்தியின் சகுனியை தொடர்ந்து, கடந்த 2016ஆம் ஆண்டு விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான வீர தீர சூரன் படத்தை இயக்கினார். தற்போது 8 ஆண்டுகள் கழித்து, யோகி பாபுவை முதன்மை பாத்திரமாக வைத்து குழந்தைகள் முன்னேற்ற கழகம் என்ற திரைப்படத்தை சங்கர் தயாள் இயக்கியுள்ளார்.
இப்படத்துக்கான பத்திரிகையாளர் சந்திப்பு இன்று (டிச. 19) நுங்கம்பாக்கத்தில் உள்ள அரங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கு வந்த இடத்தில், பத்திரிகையாளர் சந்திப்பு தொடங்குவதற்கு முன்பு நெஞ்சுவலி என்று கூறியுள்ளார். இதையடுத்து, அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
படம் வெளியாவதற்கு முன்பே, அதன் இயக்குநர் மறைந்த செய்தி குழந்தைகள் முன்னேற்ற கழகம் படக்குழுவினரையும், சினிமாத் துறையினரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.