"கேப்டன் பிரபாகரன்" பார்ட் 2 வருமா? இயக்குனர் ஆர்.கே.செல்வமணி விளக்கம்!
விஜயகாந்த் நடிப்பில் அவருடைய 100-வது படமாக வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘கேப்டன் பிரபாகரன்’. ஆர்.கே.செல்வமணி இயக்கி, 1991-ல் வெளியான இந்தப்படம் 34 வருடங்களுக்குப் பிறகு டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டுநாளை மறுநாள் (22-ம் தேதி) ரீ ரிலீஸ் ஆகிறது.
இந்த படத்தில் விஜயகாந்த், மன்சூர் அலிகான், ரூபிணி, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த நிலையில் இயக்குனர் ஆர்.கே.செல்வமணி செய்தியாளர்களிடம் பேசுகையில், "கேப்டன் பிரபாகரன் படத்தின் ரயில் சண்டையும், ஆட்டமா தேரோட்டமா பாடலும் இன்றும் பேசப்படுகிறது. அந்த சண்டை காட்சியை பிரமாண்டமாக எடுக்க ஆசைப்பட்டேன். 25 குதிரைகள் வேண்டும் என்றேன். ஆனால் தயாரிப்பாளரோ 100 குதிரை தருகிறேன் என்றார். அப்படியொரு பிரமாண்ட சண்டை காட்சி எடுக்க இடம் கிடைக்கவில்லை.
கடைசியில் ஆண்டிப்பட்டி கணவாய் அருகே 4 நாட்களில் எடுத்தோம். ஆட்டமா தேரோட்டமா பாடல் எடுத்தது தனிக்கதை. முதலில் இளையராஜா வேறு பாடல் கொடுத்தார். அது எனக்கு பிடிக்கவில்லை. அவரிடம் விஷயத்தை சொன்னேன். அவர் கோபப்பட்டார். ஆனாலும் ஒரே நாளில் இந்த பாடலை ரெகார்ட் செய்து படப்பிடிப்பு தளத்திற்கு அனுப்பி வைத்தார். எனக்காக அவரே கதையை சொல்லி, ஸ்வர்ணலதாவை வைத்து பாட வைத்தார். அந்த பாடலை கேட்டவுடனே அனைவருக்கும் பிடித்து விட்டது. அந்த பாடல் வெற்றிக்கு இளையராஜா, ரம்யா கிருஷ்ணன் தான் காரணம்.
இப்போது 350க்கும் அதிகமான தியேட்டர்களில் கேப்டன் பிரபாகரன் ரிலீஸ் ஆகிறது. அடுத்து கேப்டன் பிரபாகரன் பார்ட் 2 வை, விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியனை வைத்து இயக்க ஆசைப்படுகிறேன். அவர் நடித்த படைத்தலைவன் படத்தை பார்த்தேன். அவர் பார்ட் 2க்கு செட் ஆவார். நான் விஜயகாந்த்தால் வளர்ந்தேன். அவருக்கு நன்றி கடனாக இதை செய்ய ஆசைப்படுகிறேன்.
கேப்டன் பிரபாகரன் படத்தின் தாக்கத்தில் புஷ்பா எடுக்கப்பட்டதா என கேட்கிறார்கள். ஒரு வெற்றி படத்தின் பாதிப்பில் இன்னொரு படம் உருவாகலாம். நான் கூட சோலோ பாதிப்பில்தான் கேப்டன் பிரபாகரன் எடுத்தேன். இப்படி சொல்வது அந்த படைப்பாளிக்கு கவுரவும் தான் என்று தெரிவித்துள்ளார்.