4-ஆம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டல் - பள்ளி தாளாளர் கணவர் உட்பட 4 பேர் கைது!
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த மணப்பாறைப்பட்டி சாலையில் உள்ள தனியார் சிபிஎஸ்இ பள்ளியில் தாளாளராக இருந்து வருபவர் சுதா. இவரது கணவர் வசந்த். இந்நிலையில் நேற்று பள்ளியில் நடைபெற்ற ஓவியப் போட்டியின் போது, நான்காம் வகுப்பு படித்து வரும் 9 வயது சிறுமியிடம் அருகில் அமர்ந்து வசந்தகுமார் பாலியல் ரீதியான சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
சிறுமி பள்ளி முடித்து வீடு திரும்பி பெற்றோரிடம் கூறியதை அடுத்து, பள்ளிக்கு சென்ற பெற்றோர் மற்றும் உறவினர்கள் வசந்தகுமாருக்கு தர்ம அடி கொடுத்து காவல்துறையிடம் ஒப்படைத்ததாக கூறப்படுகிறது. வசந்தகுமாரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற போலீஸார், மகளிர் காவல் ஆய்வாளர் வேறு அலுவலுக்காக சென்றிருந்த காரணத்தால் வழக்கை விசாரிக்க தாமதமானதாக தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த உறவினர்களும், மணப்பாறைப்பட்டி பகுதி ஊர் பொதுமக்களும் தனியார் மெட்ரிக் பள்ளியின் வளாகத்தில் புகுந்து உள்ளே இருந்த கண்ணாடி கதவுகள், இரண்டு கார்கள், வகுப்பறை கதவுகள், கண்ணாடி அறைகள் மற்றும் பூச்செடிகளை அடித்து நொறுக்கி சூறையாடினர். டிஎஸ்பி தலைமையிலான போலீஸார் குவிக்கப்பட்டும் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த முடியவில்லை.
மேலும் சிறுமியின் உறவினர்கள் திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் நள்ளிரவில் திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து முழுமையாக 10 கிலோ மீட்டருக்கு தேங்கியது. தகவலறிந்து நிகழ்விடத்திற்கு சென்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் மற்றும் திருச்சி சரக காவல்துறை துணைத்தலைவர் வி.வருண்குமார் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட உறவினரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
மேலும் போராட்டத்திற்கு ஆதரவாக கும்பல் கூடிய நபர்கள் மீது போலீஸார் லேசான தடியடி நடத்தி கும்பலை களைத்து, போக்குவரத்தை சரி செய்தனர்.
இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் கூறுகையில் பள்ளி நிர்வாகிகள் ஐந்து பேர் மீது புகார் வந்துள்ளதாகவும் அதில் சுதா, வசந்த், மாராச்சி செழியன் உள்ளிட்ட நான்கு பேரை தற்போது கைது செய்திருப்பதாகவும் பள்ளியின் முதல்வரையும் கைது செய்து விடுவோம் என்றும் கூறியுள்ளார். மேலும் இதுவே பள்ளி மீது வரும் முதல் புகார் என்றும், இதுபோல் மேலும் சிலர் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறும் நிலையில், அதற்கு உண்டான ஆவணங்களை புலன் விசாரணை செய்து காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் எஸ்.பி தெரிவித்துள்ளார்.
தாளாளரின் கணவர் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், பள்ளி முதல்வர் உள்ளிட்ட 5 பேர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நேற்று நள்ளிரவு பள்ளி நிர்வாகிகள் நான்கு பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது சிபிஎஸ்சி பள்ளியின் முதல்வர் ஜெயலட்சுமி மணப்பாறை காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.