புதுச்சேரியில் 1ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை - “நிர்வாகத்தினருக்கு சம்பந்தம் இருந்தால் பள்ளிக்கு சீல் வைக்கப்படும்” என மாவட்ட ஆட்சியர் உறுதி!
புதுச்சேரி தவளக்குப்பம் தானாம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் (ஜோசப் மேல்நிலைப்பள்ளி) அறிவியல் பிரிவு ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் மணிகண்டன். இவர் அதே பள்ளியில் 1 ஆம் வகுப்பு படிக்கும் 6 வயது மாணவி ஒருவருக்கு கடந்த 4 மாதங்களாக பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
இச்சூழலில் மாணவி நேற்று உடல்நிலை சரியில்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இதனை கண்ட அவரது பெற்றோர்கள் அவரை மருத்துவமனை அழைத்து சென்று பரிசோதித்த போது, மாணவி பாலியல் சீண்டலுக்கு ஆளாகி இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து மாணவியிடம் கேட்டபோது, தன்னிடம் ஆசிரியர் ஒருவர் தகாத முறையில் நடந்து கொண்டது குறித்து தெரிவித்துள்ளார்.
இதையடுத்து மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளிக்கு சென்று இது குறித்து கேட்டபோது, பள்ளி நிர்வாகம் தரப்பில் சரியான பதில் கூறவில்லை என தெரிகிறது. இதனையடுத்து மாணவியின் பெற்றோர் இது தொடர்பாக தவளகுப்பம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். ஆனால், காவல்துறையும் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது வழக்குப் பதிவு செய்யாமல்
தாமதப்படுத்தியுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சம்பந்தப்பட்ட பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
தொடர்ந்து அவர்கள் ஆசிரியரை கைது செய்யக்கோரியும், வழக்கு பதிவு
செய்யக்கோரியும் புதுச்சேரி - கடலூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து
பாதிக்கப்பட்டது. இதனிடையை சம்பந்தப்பட்ட ஆசிரியர் மணிகண்டனை விசாரணைக்காக பள்ளியில் இருந்து போலீசார் காவல் நிலையம் அழைத்து செல்ல முயன்ற போது ஆசிரியரை பொதுமக்களும், உறவினர்களும் தாக்கினர்.
மேலும் சம்பந்தப்பட்ட பள்ளியில் மேஜை, கண்ணாடி உள்ளிட்ட பொருட்களை பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினர்கள் உடைத்து சூரையாடினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபடுபவர்களை கட்டுப்படுத்த காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். சூழ்நிலை மோசமாக சம்பவ இடத்திற்கு வந்து அத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், சபாநாயகருமான செல்வம் மற்றும் டிஐஜி சத்திய சுந்தரம் ஆகியோர் மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,
“ஆசிரியர் மீது போக்ஸோ பிரிவின் கீழ் வழக்கு பதிந்து, இந்த விவகாரத்தில் பள்ளி சார்பில் யாரேனும் உடைந்தையாக இருந்தால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பள்ளிக்கு சீல் வைக்கப்படும்” என தெரிவித்தார்.