மலையாள திரையுலகை ஆட்டுவிக்கும் பாலியல் புகார் - பிரபல தயாரிப்பாளர் #Baburaj மீதும் குற்றச்சாட்டு!
மலையாள திரைப்பட தயாரிப்பாளரும் நடிகருமான பாபுராஜ் மீது துணை நடிகை ஒருவர் பாலியல் குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார்.
கேரளத்தில் பெண் தொழிலாளர்கள் மற்றும் நடிகைகள் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாவதாக ஹேமா அறிக்கை தெரிவித்தது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளத்தில் கடந்த 2017-ஆம் ஆண்டு நடிகர் திலீப் உள்ளிட்ட பலர் பாலியல் துன்புறுத்தல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டனர். இதைத் தொடர்ந்து கேரள திரைப்படத் துறையில் பாலியல் துன்புறுத்தல் குறித்த பிரச்னைகளை ஆய்வு செய்வதற்காக, நீதிபதி ஹேமா தலைமையிலான 3 பேர் கொண்ட ஹேமா கமிட்டி அமைக்கப்பட்டது.
கேரள திரைப்படத் துறையில் பணிபுரியும் பெண்களின் நிலைமைகள் குறித்து 51 பேரிடம் வாக்குமூலம் பெற்று, ஆய்வு மேற்கொண்ட ஹேமா கமிட்டி, மாநில அரசிடம் சமீபத்தில் அறிக்கையை சமர்ப்பித்தது. இதில், கேரள திரைப்படத் துறையானது ஒருசில நடிகர்கள், தயாரிப்பாளர்கள் கட்டுப்பாட்டில் இயங்குவதாகவும், புதிதாக வரும் நடிகைகள் வாய்ப்புக்காக எதற்கும் சரணடைவார்கள் என்ற எண்ணம் துறையில் நிலவுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையும் படியுங்கள் :#ShivajiStatueCollapse | “பாஜக ஊழலில் வரலாற்றில் இடம்பிடித்தவர்களும் தப்பமுடியாத நிலை” - காங். விமர்சனம்!
இந்நிலையில், மலையாள திரைப்பட நடிகர்கள் சங்க இணை பொதுச்செயலாளர் பாபுராஜ் மீது பாலியல் புகார் எழுந்துள்ளது. திரைத் துறையைச் சேர்ந்த துணை நடிகை ஒருவர் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.முன்னதாக,திரைத் துறையில் துணை நடிகையாக இருந்தபோது 2019ம் ஆண்டு பாலியல் சீண்டலில் ஈடுபட்டதான பாபுராஜ் மீது அவர் புகார் எழுப்பியுள்ளார். மலையாள திரைப்பட நடிகர்கள் சங்கத்தின் (அம்மா) இணை பொதுச்செயலாளராக உள்ள பாபுராஜ், இந்த குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
மேலும், துணை நடிகை குற்றச்சாட்டை சட்ட ரீதியாக எதிர்கொள்ள உள்ளதாகவும் குறிப்பிட்டார். மலையாள திரைப்பட நடிகர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் சித்திக் மற்றும் கேரள கலாசித்ரா அகாதெமியின் தலைவர் ரஞ்சித் ஆகியோர் மீதும் பாலியல் புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் தங்கள் பதவிகளை ராஜிநாமா செய்தனர். இதற்கிடையே, கேரள திரைத் துறை பாலியல் விவகாரம் தொடர்பாக தனிப்பட்ட நபர்கள் மீது புகார் அளிக்க முன்வர வேண்டும் என கேரள அரசு கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.