பாலியல் வன்கொடுமை வழக்கு : தப்பி ஓட முயன்ற குற்றவாளிகளை சுட்டுப் பிடித்த போலீசார்!
திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த நபர் ஒருவர் தனது உறவுமுறை பெண்ணுடன், கடந்த 18ஆம் தேதி கிருஷ்ணகிரி மலை மீது உள்ள தர்காவிற்கு சென்றுள்ளனர். கடும் வெயில் காரணமாக மலையில் இருந்து இறங்காமல் அங்கேயே சற்று ஓய்வு எடுத்துள்ளனர். அந்த சமயம் அங்கு சென்ற நான்கு இளைஞர்கள் அந்த பெண்ணை மிரட்டி வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட இருவரும் தங்களுக்கு நேர்ந்த கொடுமையை, போலீசாரிடம் தெரிவித்து புகார் அளித்துள்ளனர். அதனைதொடர்ந்து, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சங்கர், துணை காவல் கண்காணிப்பாளர் முரளி, ஆய்வாளர்கள் வெங்கடேஷ் பிரபு, குலசேகரன் மற்றும் குற்ற பிரிவு போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு கிருஷ்ணகிரி நகரை சேர்ந்த சுரேஷ், நாராயணன், அபிஷேக், கலையரசன், ஆகிய நான்கு பேர் மீது வழக்குப் பதிவு செய்து தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று இரவு அபிஷேக், கலையரசன் ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் முதல் குற்றவாளியாக கருதப்படும் சுரேஷ் மற்றும் நாராயணனை தேடி வந்துள்ளனர். அப்போது குற்றவாளிகள் கிருஷ்ணகிரி அருகே பொன்மலை குட்டை பெருமாள் கோயில் பின்புறம் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் கிருஷ்ணகிரி நகர காவல் ஆய்வாளர் வெங்கடேஷ் பிரபு, உதவி ஆய்வாளர் பிரபாகரன், முதல் நிலை காவலர் குமார், தலைமை காவலர் விஜயகுமார் ஆகியோர் கொண்ட போலீசார் அவர்களை பிடிக்க சென்றனர். அப்போது சுரேஷ் தான் மறைத்து வைத்து இருந்த கத்தியால் முதல் நிலை காவலர் குமார், மற்றும் தலைமை காவலர் விஜயகுமார் மீது தாக்குதல் நடத்தினார். இதில் குமாரின் மார்பு மற்றும் கையில் காயம் ஏற்பட்டுள்ளது.

இதனால் போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு குற்றவாளிகளை சரணடைய வலியுறுத்தினர். ஆனால், அவர்கள் தொடர்ந்து போலீசாரை தாக்க முற்பட்டதால் குற்ற பிரிவு உதவி ஆய்வாளர் பிரபாகரன் பாதுகாப்பிற்காக குற்றவாளிகளை நோக்கி சுட்டார். இதில் சுரேஷ் வலது காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து கீழே விழுந்துள்ளார். இதை பார்த்து நாராயணன் தப்பி ஓடும்போது கீழே விழுந்து அவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
இதையடுத்து போலீசார் இருவரையும் பிடித்து கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். காயம் அடைந்த காவலர்கள் இருவரும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை, நேற்று பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து புகார் மனு பெறப்பட்டது. உடனடியாக போலீசார் விரைந்து செயல்பட்டு கலையரசன் மற்றும் அபிஷேக் இருவரை கைது செய்தனர். தொடர்ந்து இந்த சம்பவத்தின் முக்கிய குற்றவாளியான சுரேஷ் மற்றும் நாராயணன் இருவரை பிடிக்க இன்று சென்றபோது அவர்கள் கத்தியால் தாக்கியதால் தற்காப்புக்காக சுட்டுப்பிடிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது” என தெரிவித்தார்.