For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பாலியல் வன்கொடுமை வழக்கு - சம்பந்தப்பட்ட திமுக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க கோரி கண்டன ஆர்ப்பாட்டம் அறிவித்த அதிமுக!

பாலியல் வன்கொடுமை வழக்கில் சம்பந்தப்பட்ட திமுக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க கோரி அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது.
06:29 PM May 19, 2025 IST | Web Editor
பாலியல் வன்கொடுமை வழக்கில் சம்பந்தப்பட்ட திமுக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க கோரி அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது.
பாலியல் வன்கொடுமை வழக்கு    சம்பந்தப்பட்ட திமுக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க கோரி கண்டன ஆர்ப்பாட்டம் அறிவித்த அதிமுக
Advertisement

அரக்கோணம் பகுதியில் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த திமுக இளைஞர் அணி துணை அமைப்பாளர் தெய்வச்செயல் மீது நடவடிக்கை எடுக்க கோரி திமுக அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Advertisement

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தில் திமுக இளைஞர் அணி நிர்வாகி தெய்வச்செயல்,  கல்லூரி மாணவியை ஏமாற்றிய செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. அரக்கோணத்தில் உள்ள அரசு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் கல்லூரி மாணவியை, ஏற்கெனவே வேறு பெண்ணுடன் திருமணமாகி வாழ்ந்து வரும் அரக்கோணம் கிழக்கு ஒன்றிய திமுக இளைஞர் அணி துணை அமைப்பாளர் F. தெய்வச்செயல், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் அம்மாணவியை பின்தொடர்ந்தும், கைபேசி வாயிலாகவும் காதலிப்பதாகத் தொடர்ந்து வற்புறுத்தியும், திருமணம் செய்துகொள்ள விருப்புவதாக தொடர்ந்து டார்ச்சர் செய்தும் மிரட்டியுள்ளார்.

அம்மாணவி 'எனக்கு ஏற்கெனவே திருமணமாகி கருத்து வேறுபாட்டால் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது' என்று தெரிவித்த நிலையிலும், தொடர்ந்து திமுக நிர்வாகி தெய்வச்செயல் வலுக்கட்டாயமாக அம்மாணவியை கடத்திச் சென்று தனது உறவினர்களுடன் சோளிங்கர் அருகில் உள்ள கோயிலில் திருமணம் செய்துகொண்ட பல முக்கிய திமுக நிர்வாகிகளிடம் கல்லூரி மாணவியை தனது மனைவி என்று அறிமுகம் செய்துவைத்துள்ளார்.

இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் மேலும் ஒரு பெண், கல்லூரி மாணவியிடம் ஏற்கெனவே ஐந்து வருடத்திற்கு முன்பு திமுக நிர்வாகி தெய்வச்செயல் தன்னை ஏமாற்றி திருமணம் செய்துகொண்டு தவறாகப் பயன்படுத்துவதாகவும், மேலும், இந்த திமுக நிர்வாகி இதுபோல் பல பெண்களை ஏமாற்றி மோசடி செய்துள்ள விபரத்தையும் தெரிவித்துள்ளார்.

எனவே, கல்லூரி மாணவி, திமுக நிர்வாகி தெய்வச்செயல் ஏற்கெனவே பலருடன் திருமணம் செய்துகொண்ட நிலையில், தன்னையும் பிரட்டி திருமணம் செய்து கொண்டதாகவும், தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாகவும் தவறான வழியில் ஈடுபடுத்த நுன்புறுத்துவதாகவும், உரிய ஆதாரங்களுடன் காவல் துறையில் புகார் அளித்தும், காவல்துறை FIR பதிவு செய்ய மறுத்ததாகவும், கடும் போராட்டத்திற்குப் பிறகு காவல்துறை, நான் கூறிய முழு விபரங்களையும் FIR-ல் குறிப்பிடாமல் பதிவு செய்ததால், அறிக்கையை வாங்க மறுத்துப் போராட்டம் நடத்தி உள்ளார்.  திமுக இளைஞர் அணி நிர்வாகி தெய்வச்செயல் கல்லூரி மாணவியை ஏமாற்றியதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. இதற்கு எனது கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

கல்லூரி மாணவியின் புகாருக்கு உரிய நேரத்தில் முழு விபரங்களையும் FIR-ல் பதிவு செய்யாமல் இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்திய காவல் துறையைக் கண்டித்தும், தமிழ்நாட்டில் தொடர்ந்து பெண்களுக்கு எதிராக அதிகரித்து வரும் பாலியல் குற்றங்களைத் தடுக்காத திமுக அரசைக் கண்டித்தும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக இராணிப்பேட்டை கிழக்கு மாவட்டத்தின் சார்பில், 21.5.2025 புதன் கிழமை காலை 9.30 மணியளவில், அரக்கோணம் பழைய பேருந்து நிலையம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். நிர்வாகத் திறனற்ற திமுக-வின் அரசைக் கண்டித்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், அதிமுக நிர்வாகிகள் மற்றும்  பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்”

இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement