கலாஷேத்ரா கல்லூரி நடன ஆசிரியர் மீது பாலியல் புகார் - விசாரணையை 60 நாட்களுக்குள் முடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
பாலியல் தொல்லை கொடுத்ததாக கலாஷேத்ரா கல்லூரி நடன ஆசிரியருக்கு எதிராக முன்னாள் மாணவி அளித்த புகார் குறித்து விசாரணையை 60 நாட்களுக்குள் முடிக்க செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா அறக்கட்டளையின் ருக்மணி அருண்டேல்
கல்லூரியில் படித்தபோது பாலியல் தொல்லைக்கு உள்ளானதாக முன்னாள் மாணவி ஒருவர் புகார் அளித்திருந்தார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் கல்லூரியின் நடனத் துறை உதவி பேராசிரியர் ஹரி பத்மன் என்பவர் கைது செய்யப்பட்டார். பின்னர் கைது செய்யப்பட்டிருந்த ஹரி பத்மன் ஜாமீன் பெற்றார்.
இந்த நிலையில், மற்றொரு கலாசேத்ரா கல்லூரி நடன ஆசிரியர் சிறுமிகள் மற்றும் மாணவிகளுக்கு நடனம் கற்று தருவதாக கூறி தன்னிடம் தவறாக நடத்து கொண்டதாக மற்றொரு மாணவி ஒருவர் சென்னை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தனது பெயரை குறிப்பிடாமல் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இதையும் படியுங்கள்: ரூ.2 லட்சம் மதிப்பிலான நிவாரண உதவிகள்: எஸ்டிபிஐ மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் வழங்கினார்!
அவரது மனுவில், நடன ஆசிரியருக்கு காவல்துறையில் செல்வாக்கு உள்ளதால் தனது புகாரில் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறியுள்ளார். மேலும், உரிய முறையில் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கும்படி தமிழ்நாட்டு டிஜிபிக்கு உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயசந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரர் அளித்த புகார் மீது உரிய விசாரணை நடத்தி அடிப்படை முகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்து சட்டத்திற்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
மேலும் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை அதிகாரியை நியமித்து 60 நாட்களுக்குள் விசாரணையை முடித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் சென்னை மாநகர காவல்துறைக்கு உத்தரவிட்டார். மேலும், விளம்பரத்திற்காக புகார் அளிக்கப்பட்டிருப்பதாக தெரிய வந்தால் புகார்தாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.