பாலியல் வழக்கு - மலையாள நடிகர் #Siddique விசாரணைக்கு ஆஜர்!
பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நடிகர் சித்திக் சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணைக்கு ஆஜரானார்.
மலையாள திரையுலகில் பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுகிறார்களா? என்பது குறித்து ஆய்வு செய்ய நீதிபதி ஹேமா தலைமையிலான 3 பேர் கொண்ட குழுவை கேரள அரசு அமைத்தது. கடந்த 2019-ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட இந்தக் குழுவின் அறிக்கையை மாநில அரசு வெளியிடாமல் இருந்தது. இதனைத் தொடர்ந்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அறிக்கையின் அதிர்ச்சியூட்டும் விவரங்கள் கடந்த மாதம் 19-ம் தேதி வெளியாகி விவாதத்தை ஏற்படுத்தின.
கேரள திரையுலகை மட்டுமல்லாமல் அனைத்து தரப்பினரிடமும் இந்த அறிக்கை பெரிய சர்ச்சையைக் கிளப்பியது. இதன் தொடர்ச்சியாக நடிகை ரேவதி சம்பத் என்பவர் நடிகர் சித்திக் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம்சாட்டினார். இது பலரிடமும் அதிர்ச்சியை உண்டாக்கியதை தொடர்ந்து போலீசாரும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்தனர். இதன் பின்னர் மலையாள நடிகர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து நடிகர் சித்திக் ராஜிநாமா செய்தார்.
இதன் தொடர்ச்சியாக, நடிகர் சித்திக் கேரள உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனுவை தக்கல் செய்தார். அவரது முன் ஜாமீன் மனுவை கேரள உயர்நீதிமன்றம் கடந்த் செப். 24ம் தேதி தள்ளுபடி செய்தது. மேலும், நடிகர் சித்திக் தேடப்படும் குற்றவாளியாக போலீசாரால் அறிவிக்கப்பட்டு, விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டன. தலைமறைவாக இருந்த சித்திக் முன்ஜாமீன் கோரி செப்.25ம் தேதி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார்.
இதனையடுத்து உச்சநீதிமன்றம் அவருக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதனிடையே, பாலியல் வழக்கை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணைக்கு ஆஜராக உள்ளதாக, அவர் மின்னஞ்சல் மூலம் சிறப்பு புலனாய்வு குழுவுக்கு தெரிவித்தார். அதன்படி, நடிகர் சித்திக் திருவனந்தபுரம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இன்று (அக்.7) விசாரணைக்கு ஆஜரானார்.
பின்னர் அவர் கண்டோன்மென்ட் காவல் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டு அங்கு சிறப்பு விசாரணை குழு அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணை சுமார் 2 மணி நேரம் நீடித்த நிலையில், விசாரணைக்கு பிறகு அவர் விடுவிக்கப்பட்டார். விசாரணைக்கு ஆஜரான சித்திக் கேட்கப்பட்ட போதிய ஆதாரங்களை எடுத்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் சித்திக் மீண்டும் அக்.12ம் தேதி விசாரணைக்கு அஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.