"ஒரே இடத்தில் ஏழு கிருஷ்ணர்கள்" - மதுரை இஸ்கான் கோவிலில் அற்புதம்!
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, மதுரை திருப்பாலை பகுதியில் உள்ள யாதவர் கல்லூரியில் இஸ்கான் கோவில் சார்பில் ஸ்ரீகிருஷ்ண ஜென்மாஷ்டமி மஹோத்ஸவம் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவின் சிறப்பு அம்சமாக, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஏழு பிரசித்தி பெற்ற கிருஷ்ணர் கோவில்களில் உள்ள மூலவர் சிலைகளின் மாதிரி வடிவங்கள் ஒரே இடத்தில் அமைக்கப்பட்டிருந்தன.
இஸ்கான் கோவில், நாராயண பத்ரிகாஸ்ரமம், துவாரக கிருஷ்ணன், அயோத்தியா குழந்தை ராமர், பண்டர்பூரில் உள்ள ஸ்ரீ விட்டல் ருக்மணி கோவில், உடுப்பி கிருஷ்ணன் கோவில், குருவாயூர் கிருஷ்ணன் ஆகிய ஏழு கோவில்களின் கிருஷ்ணர் சிலைகள் தத்ரூபமாக காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
மதுரை மட்டுமின்றி தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், 'ஹரே கிருஷ்ணா ஹரே ராம' என பக்தி முழக்கமிட்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஒரே இடத்தில் ஏழு கிருஷ்ணர்களையும் தரிசித்தது பக்தர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்தது.
தினமும் காலை 11 மணி முதல் 2 மணி வரை ஏழு கிருஷ்ணர்களுக்கும் பல்வேறு அபிஷேகங்கள், கீர்த்தனை மற்றும் மகா அபிஷேகம் போன்ற சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. ஏராளமான குழந்தைகள் கிருஷ்ணர் மற்றும் ராதை வேடமிட்டு போட்டிகளில் கலந்துகொண்டனர். பரதநாட்டியம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.
மேலும் விழாவுக்கு வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த ஸ்ரீகிருஷ்ண ஜென்மாஷ்டமி மஹோத்ஸவம் ஆகஸ்ட் 17ஆம் தேதி வரை தினமும் காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும். பக்தர்கள் ஒரே இடத்தில் ஏழு கிருஷ்ணர்களையும் தரிசிப்பது ஒரு அரிய வாய்ப்பு என தெரிவித்தனர்.