தொடர் செயின் பறிப்பு...கொள்ளையன் என்கவுண்டர் - காவல் ஆணையர் அருண் விளக்கம்!
சென்னையில் நேற்று(மார்ச்.26) செயின் கொள்ளையில் ஈடுபட்ட ஜாபர் குளாம் உசேன் இரானி, மிசாம்மஜாதுஷ்மேசம் இரானி ஆகிய இருவரும் சென்னை விமான நிலையத்திலும், சல்மான் உசேன் இரானி என்பவர் ஓங்கோல் ரயில் நிலையத்திலும் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர். சென்னை தரமணி ரயில் நிலையம் அருகில் நகைப்பறிப்பு கொள்ளையன் ஜாபர் குளாம் உசேன் இரானி என்கவுண்டர் செய்யப்பட்டார். இந்த என்கவுண்டர் நடந்தது எப்படி? என்பது குறித்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில், சென்னை காவல் ஆணையர் அருண் செய்தியாளர்களை சந்தித்து விளக்கினார்.
அப்போது அவர் பேசியதாவது, “நேற்று இருசக்கர வாகனத்தில் இரண்டு நபர்கள் சென்னை காவல் தெற்கு மண்டலத்துக்கு உட்பட்ட சைதாப்பேட்டையில் காலை 6 மணிக்கு ஈடுபட்டனர். மேலும் 5 இடங்களில் தொடர்ச்சியாக செயின் பறிப்பு சம்பவங்கள் நடைபெற்றதை ஒட்டி, சென்னை முழுவதும் 56 இடங்களில் தீவிரமாக சோதனை நடைபெற்றது.
இது குறித்து சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில் தொடர்ச்சியாக செயின் பறிப்பில் ஈடுபட்ட இரண்டு நபர்களும் வெளிமாநிலத்தை சேர்ந்த நபர்கள் என தெரிய வந்தது.. அதன்படி விமான நிலையம் மற்றும் ரயில் நிலையங்களில் தீவிரவாகன சோதனை மேற்கொள்ளப்பட்டது, இது குறித்து சென்னை விமான நிலையத்தில் விமான நிலைய காவல் ஆய்வாளர் விசாரணை மேற்கொண்டதில் அவசரமாக கடைசி நேரத்தில் ஹைதராபாத்திற்கு செல்ல முற்பட்ட 2 கொள்ளையர்கள் டிக்கெட் கேட்டதாகவும் அதில் ஒருவர் டிக்கெட் வாங்கி சென்றதாகவும் மற்றொரு நபரின் அடையாள அட்டை சரியாக இல்லாத காரணத்தினால் டிக்கெட் வழங்கவில்லை என்றும் தெரிவிக்கபட்டது.
ஹைதராபாத் விமானம் புறப்பட தயார் நிலையில் இருந்த போது உயர் அதிகாரியின் அறிவுறுத்தலின் படி விமான கட்டுப்பாட்டு அறைக்கு உரிய முறையில் தகவல் அறிவித்தனர், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளி என அடையாளம் கண்டு அவர்களை கைது செய்தனர். விசாரணை செய்ததில் இக்குற்றத்தில் ஈடுபட்ட மூன்றாவது நபர் சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து பினாக்ஸி எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் ஹைதராபாத்துக்கு செல்வதாக தெரியவந்தது, உடனே மத்திய ரயில்வே பாதுகாப்பு படைக்கு இது குறித்து தகவல் கொடுக்கப்பட்டு ஆந்திர மாநிலத்திற்கு உட்பட்ட ஓங்கோல் ரயில் நிலையத்தில் வைத்து மத்திய ரயில்வே பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டார்.
புலன் விசாரணையில் இக்குற்ற சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் வடமாநில குற்றவாளிகள் எனவும் ஏற்கனவே இவர்கள் செய்து இருக்கும் குற்றங்கள் குறித்தும் தொடர் விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கபட்டது. கொள்ளையில் ஈடுபட்ட நேரத்தில் பயண்படுத்திய வாகனம் மற்ற மாநிலத்தின் வாகனம். மொத்தம் 6 செயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதன் மதிப்பு 26 சவரன். கொள்ளை கடத்தலுக்காக 4 குழு தென் மண்டலத்தில் அமைக்கபட்டது. சென்னை முழுவதும் 56 இடங்களில் தீவிரமாக சோதனையில் ஈடுபட்டோம்.
என்கவுண்டர் செய்யபட்ட நபரிடம் பிஸ்டல் (pistol) இருந்தது. கொள்ளையில் ஈடுபட்டவர்களை அவர்களது (shoe) வைத்து கண்டறியப்பட்டது ஒரு காரணம். சைதாபேட்டை, திருவான்மியூர் அடுத்து கிண்டி, கொள்ளையர்கள் செயின் பறிப்பில் ஈடுபட்டனர். இந்த விசாரணையில் ஜாபர் குளாம் உசேன் இராணி, மிசாம்மஜாதுஷ்மேசம் இராணி ஆகிய இருவரும் சென்னை விமான நிலையத்திலும், சல்மான் உசேன் இரானி என்பவர் ஓங்கோல் இரயில் நிலையத்திலும் கைது செய்யப்பட்டனர்.
குற்ற சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட வாகனத்தை மீட்பதற்காக தரமணி ரயில்வே நிலையத்திற்கு அருகே இன்று அதிகாலை சுமார் 2.30 மணி அளவில் அழைத்துச் சென்றபோது குற்றவாளி ஜாபர் குளாம் உசேன் இரானி என்பவர் குற்றத்திற்கு பயன்படுத்தப்பட்ட வாகனத்திலிருந்து ஏற்கனவே அவர் அங்கு மறைத்து வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை எடுத்து காவல் அதிகாரியை நோக்கிய சுட்டார். வேறு வழியின்றி தற்காப்பிற்காக சுட்டதில் ஜாபர் குளாம் உசேன் இரானி காயமடைந்தார், உடனே சிகிச்சைக்காக அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு மருத்துவர் பரிசோதித்த போது, அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தற்போது அவரது உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது”
இவ்வாறு சென்னை காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார்.