27வது முறையாக நீட்டிக்கப்பட்ட செந்தில் பாலாஜியின் காவல்!
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை 27-வது முறையாக நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
போக்குவரத்துத் துறையில், சட்டவிரோதமாகப் பணப்பரிமாற்றம் செய்ததாகப் பதியப்பட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14- ம் தேதி சட்ட விரோதப் பணப்பரிமாற்றத் தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார். இதனிடையே செந்தில் பாலாஜி கவனித்து வந்த இலாக்காக்கள் மற்ற அமைச்சர்களுக்கு பிரித்து வழங்கப்பட்டது. செந்தில் பாலாஜி தொடர்ந்து இலாக்கா இல்லாத அமைச்சராக செயல்பட்டு வந்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஆளுநர் ரவி, செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கி உத்தரவிட்டார். ஆனால் அடுத்த ஒரு சில மணி நேரத்தில் தனது உத்தரவை திரும்ப பெற்றுக் கொண்டார். இந்நிலையில் செந்தில் பாலாஜி 250 நாட்களுக்கு மேல் சிறையில் இருந்து வருகிறார். தொடர்ந்து, தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக செந்தில் பாலாஜி தாமாக முன்வந்து முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதினார். இந்த கடிதம் ஆளுநர் மாளிகைக்கு அனுப்பப்பட்டது. இந்த கடிதத்தை ஏற்பதாக ஆளுநர் மாளிகை அறிவித்தது. இதற்கிடையில் செந்தில் பாலாஜி தன்னை சிறையில் இருந்து விடுவிக்க கோரி பல ஜாமின் மனுக்கள் தாக்கல் செய்தார். கீழமை நீதிமன்றம் முதல் உச்சநீதிமன்றம் வரை தாக்கல் செய்யப்பட்ட ஜாமின் மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன.
செந்தில் பாலாஜிக்கு 26 முறை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று 27வது முறையாக காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. இன்றுடன் செந்தில் பாலாஜியின் காவல் முடிவடைந்த நிலையில், காணொளிக் காட்சிமூலம் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ். அல்லி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து மார்ச் 21 ஆம் தேதி காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். இதன்மூலம் 27வது முறையாக செந்தில்பாலாஜியின் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.