சென்னை புழல் சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவரவுள்ள செந்தில் பாலாஜி! ஆரவாரத்துடன் சிறை வாயிலில் வரவேற்க காத்திருக்கும் #DMK தொண்டர்கள்!
நிபந்தனை ஜாமீனில் வெளிவரவுள்ள செந்தில் பாலாஜிக்கு புழல் சிறை வாயிலில் மயிலாட்டத்துடன் உற்சாக வரவேற்பு அளிக்க திமுகவினர் குவிந்துள்ளனர்.
அதிமுக ஆட்சிக் காலத்தில் அமைச்சராக இருந்த போது போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி சட்ட விரோதமாக பணம் பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் திமுக ஆட்சியில் மின்சாரத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் 14ஆம் தேதி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். 471 நாட்களாக சிறையில் உள்ள செந்தில் பாலாஜிக்கு இன்று உச்ச நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
இந்நிலையில், சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியை ஜாமீனில் விடுவிப்பதற்கான நீதிமன்ற நடைமுறைகள் நடைபெற்று வருகின்றன. இதனால் அவர் எப்போது வேண்டுமானாலும் புழல் சிறையை விட்டு வெளிவரலாம் என்பதால் அங்கு திமுக ஆதரவாளர்கள் குவிந்துள்ளனர். அவர்களுக்கு வாகனத்தில் உணவு வரவழைக்கப்பட்டு மதிய உணவு விநியோகிக்கப்பட்டது.
அதோடு, திமுக நிர்வாகிகள் ஒயிலாட்டம், மயிலாட்டம் மேளதாளத்துடன் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை வரவேற்க சிறை வளாக முன்பு குவித்து உள்ளனர். இதனால் புழல் சிறை முன்பு திமுக தொண்டர்களின் கூட்டம் அலைமோத தொடங்கியுள்ளது.