#Google-ன் உதவியால் குடும்பத்தில் இணைந்த முதியவர்கள்! எப்படி தெரியுமா?
மகாராஷ்டிராவில் காணாமல் போன 2 முதியவர்கள் வெற்றிகரமாக, கூகுளின் உதவியோடு அவர்களின் குடும்பங்களுடன் இணைந்தனர்.
மனநலம் பாதிக்கப்பட்ட 70 வயதான மாவ்ஜிபாய் வாக்ரி குஜராத்தின் வதோதராவில் காணாமல் போனார். பால்கர் மாவட்டத்தில் சுற்றித் திரிந்த அவரை, செப்.14ஆம் தேதியன்று ஜீவன் ஆனந்த் சன்ஸ்தா தொண்டு நிறுவனத்தினர் தங்களது ஆசிரமத்திற்கு அழைத்துச் சென்றனர். பின்னர் அவரிடம் பேசி சில தகவல்களை பெற்றனர். அவர் சொன்ன தகவல்களை வைத்து கூகுளில் தேடியுள்ளனர். கூகுளின் உதவியோடு வாக்ரி பகுதியின் காவல்துறையை தொடர்புகொண்டு, இவர் குறித்து கூறியுள்ளனர். அவரது புகைப்படத்தையும் அனுப்பி வைத்துள்ளனர்.
தொடர்ந்து போலீசார் அவரது குடும்பம் குறித்து விசாரிக்க தொடங்கியுள்ளனர். இதைத் தொடர்ந்து தொண்டு நிறுவனத்தினர் அந்த முதியவரை அழைத்துச் சென்று செப்.15ஆம் தேதி அவரின் குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.
அதே போல் மகாராஷ்டிராவின் பன்வேலை சேர்ந்தவர், 70 வயதான பழங்குடி பெண் கோமா புக்ரே. இவர் மும்பை செல்லும் பேருந்தில் தவறுதலாக ஏறி விபத்தில் சிக்கியுள்ளார். பின்னர் இவரையும் ஆசிரமத்திற்கு அழைத்து சென்ற தொண்டு நிறுவனம், மூதாட்டியிடம் கிராமத்தை கேட்டு தெரிந்துள்ளனர். அந்த கிராமத்தின் பெயரை கூகுளில் தேடி, பஞ்சாயத்து தலைவரின் மொபைல் எண்ணை கண்டுபிடித்தனர். பின்னர் அவருக்கு வாட்ஸ் அப் மூலம் மூதாட்டியின் புகைப்படத்தை அனுப்பி வைத்தனர்.
இதனை வைத்து அந்த பஞ்சாயத்து தலைவர் அங்குள்ள கிராமங்களில் விசாரித்து, மூதாட்டியின் உறவினர்களைக் கண்டுபிடித்தார். பின்னர் அந்த மூதாட்டியை சொந்த கிராமத்துக்கு தொண்டு நிறுவனத்தினர் அனுப்பி வைத்தனர்.