X தளம் (ட்விட்டர்) மூலம் கோரிக்கை வைத்த மூத்த வாக்காளர் - வாக்கு செலுத்த உதவிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்!
எக்ஸ் தளம் மூலம் வாக்களிக்க உதவுமாறு கோரிக்கை வைத்த மூத்த வாக்காளரை, அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து சென்று, வாக்குச்சாவடியில் நேரடியாக வாக்கு செலுத்த உதவியுள்ளார்.
இந்தியாவின் 18வது நாடாளுமன்ற தேர்தல் இன்று தொடங்கியது. மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெறும் தேர்தலில் முதற்கட்டமாக நாட்டில் உள்ள 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் இன்று ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. மக்கள் பலர் தங்கள் ஜனநாயக கடமையை தவறாமல் ஆற்றியுள்ளனர்.
இந்நிலையில் மூதாட்டி ஒருவர் தனது வாக்குரிமைக்காக அமைச்சர் பழனிவேல் தியாகராஜனிடம் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்தவர் 99 வயதான லீலா. இவரது மகள்கள் வெளிநாட்டில் வசித்து வருகின்றனர். ஒரு மகள் தவிட்டு சந்தை பகுதியில் தங்கி இருக்கிறார்.
இந்த தேர்தலில் இவருக்கான வாக்குச்சாவடி மையம் மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கே.கே.நகர் மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் உள்ளது. தபால் ஓட்டு வரையறை அளிக்கும் காலத்தை தவறவிட்ட மூதாட்டி லீலா தன்னாள் வாக்களிக்க முடியாதோ என பயந்துள்ளார். பின்னர் தமது மகள் மூலமாக தகவல்தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு எக்ஸ்தள பக்கத்தில் வாக்களிக்க உதவுமாறு கோரிக்கை வைத்துள்ளார்.
மூதாட்டியின் கோரிக்கையை ஏற்ற அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தன் அலுவலக பணியாளர்களிடம் மூதாட்டிக்கு உதவுமாறு கூறியுள்ளார். பின்னர் உதவியாளர்கள் மூலம் ஆம்புலன்ஸ் கொண்டு வரப்பட்டு லீலா மூதாட்டி வெற்றிகரமாக தனது வாக்களிக்கும் ஜனநாயக கடமையை நிறைவேற்றியுள்ளார்.