பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கைது!
தமிழ்நாடு அரசின் டாஸ்மாக் நிறுவனம் தொடர்புடைய இடங்களில் நடந்த அமலாக்கத்துறை சோதனையைத் தொடர்ந்து, டாஸ்மாக்கில் ரூ.1000 கோடிக்கு மேல் ஊழல் நடந்திருப்பதாக அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டது.
இதையடுத்து டாஸ்மாக்கில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றம்சாட்டி, அதனைக் கண்டித்து 17ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார். அதன்படி, சென்னை எழும்பூரில் உள்ள தாளமுத்து நடராஜன் மாளிகையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்திற்கு வெளியே பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் பாஜகவின் முக்கியத் தலைவர்கள் வீட்டின் முன், போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம், தாளமுத்து நடராஜர் மாளிகை, டாஸ்மாக் தலைமை அலுவலகம், பாஜக முக்கியத் தலைவர்களின் வீடு என பல்வேறு இடங்களிலும் சுமார் 500 காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
பாஜக முன்னாள் மாநிலத் தலைவரான தமிழிசை சௌந்தரராஜன் வசிக்கும் சாலிகிராமம் இல்லம் முன் காவல் துறையினர் குவிக்கப்பட்டனர். அவர், ஆர்ப்பாட்டத்திற்காக வீட்டை விட்டு கிளம்பிய நிலையில், அங்கேயே கைது செய்யப்பட்டு அவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
அதேபோல், பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி. செல்வம் போராட்டத்தில் பங்கேற்பதற்காகப் புறப்பட்டபோது கைது செய்யப்பட்டார். இந்தப் போராட்டத்திற்கு போலீசார் அனுமதி கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பாஜக தலைவர்கள் வீட்டுக் காவலில் சிறை வைக்கப்பட்டதற்கு மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது;
“திமுக அரசின் ரூ.1,000 கோடி டாஸ்மாக் ஊழலைக் கண்டித்து,பாஜக சார்பில், இன்று சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகம் முற்றுகைப் போராட்டம் அறிவித்திருந்தோம். திமுக அரசு, பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் ஆளுநருமான, தமிழிசை சௌந்தரராஜன், மாநிலச் செயலாளர் வினோஜ் பி.செல்வம் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகளைப் போராட்டத்தில் பங்கேற்கக் கூடாது என, வீட்டுச் சிறையில் வைத்திருக்கிறது.
பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் பசைபோட்டு ஒட்டியது போல இருக்கும் ஆட்களைக் கொண்டு, கீழ்மட்டத்தில் இருக்கும் அதிகாரிகளை உங்கள் ஏவலுக்குப் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறீர்கள். ஜனநாயக ரீதியாகப் போராட்டம் அறிவித்து, முற்றுகை தேதியை முன்னரே அறிவித்ததால்தானே, உங்களால் இதுபோன்ற கோழைத்தனமான நடவடிக்கைகளில் ஈடுபட முடிகிறது?
தேதியே அறிவிக்காமல், திடீரென்று ஓருநாள், நாங்கள் போராட்டத்தை முன்னெடுத்தால் உங்களால் என்ன செய்ய முடியும்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.