செங்கோட்டையனின் கருத்துதான் அதிமுக தொண்டர்களின் கருத்தும் - சசிகலா அறிக்கை
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று காலை பத்திரிக்கையாளர் சந்திப்பில், அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.
இந்த நிலையில் செங்கோட்டையனின் கருத்துக்கு சசிகலா ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பேரியக்கம் எம்ஜிஆர் அவர்களால் ஆராம்பிக்கப்பட்டு, ஜெயலலிதா ஆகியோரால் வளர்த்தெடுக்கப்பட்ட மாபெரும் ஒரு பேரியக்கம். ஜெயலலிதா அவர்கள் சூளுரைத்ததுபோல் "இன்னும் 100 ஆண்டுகள் ஆனாலும் இந்த இயக்கம் மக்களுக்காகவே இயங்கும்.
அஇஅதிமுக எந்த சக்தியாலும் அழிக்கமுடியாத ஒரு பேரியக்கம் என்பதை கழக மூத்த முன்னோடியும், கழக சட்டமன்ற உறுப்பினருமான அன்பு சகோதரர் செங்கோட்டையன் நிரூபித்து இருக்கிறார். பல்வேறு நெருக்கடியான காலகட்டங்களிலும் செங்கோட்டையன் உடனிருந்தவர். தனது உடம்பில் ஓடுவது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் இரத்தம் தான் என்பதை நிரூபித்துள்ளார். கழகம் ஒன்றுபட வேண்டும் என செங்கோட்டையன் அவர்களின் கருத்துதான் இன்றைக்கு ஒவ்வொரு தொண்டர்களின் கருத்து தமிழக மக்களின் கருத்தும் இதுதான். நானும் இதைத்தான் வலியுறுத்துகிறேன்.
இருபெரும் தலைவர்கள் உருவாக்கிய இந்த இயக்கம் ஒரு காட்டாற்று வெள்ளம் போன்றது. இதனை எந்த அணை போட்டும் யாராலும் தடுக்க முடியாது. வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான மக்கள் விரோத அரசு வீட்டுக்கு அனுப்பப்படுவது உறுதி. ஒன்றுபட்ட வலிமைமிக்க அனைத்திந்திய அண்ணாதிராவிட முன்னேற்றக் கழகம் தான் தமிழகத்தில் ஆட்சிமாற்றம் ஏற்பட வழிவகை செய்யும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்”
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.