தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரானார் செல்வப்பெருந்தகை!
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக கே.எஸ். அழகிரி 5 ஆண்டுகளாக தொடர்ந்தார். ஆயினும் அவரே தலைவராக தொடர்ந்து வந்த நிலையில், அடுத்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் யார் என்பது குறித்த சர்ச்சை கிளம்பிய வண்ணம் இருந்தது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் போட்டியில் செல்வப்பெருந்தகை, ஜோதிமணி, கார்த்தி சிதம்பரம், செல்லகுமார், ரூபி மனோகரன் உள்ளிட்டோர் பெயர் அடிபட்டு வந்தது. இதனால் கே.எஸ்.அழகிரி விரைவில் மாற்றப்படுவார் என்ற தகவல் பரவி வந்தது.
இந்நிலையில், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்த தகவலைக் காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால் அறிவித்துள்ளார்.அதேபோல தமிழ்நாடு காங்கிரஸ் சட்டப்பேரவை குழு தலைவராக ராஜேஷ் குமார் எம்.எல்.ஏவை நியமித்தும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால் அறிவித்துள்ளார்.
செல்வப்பெருந்தகை தற்போது காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவராக இருந்த நிலையில், அவருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவி கொடுக்கப்பட்டு, அவர் ஏற்கனவே வகித்து வந்த தமிழ்நாடு காங்கிரஸ் சட்டப்பேரவை குழு தலைவர் பொறுப்பு ராஜேஷ் குமார் எம்.எல்.ஏவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள செல்வபெருந்தகை, “ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கேவின் நம்பிக்கைக்குரிய பாத்திரமாக செயல்படுவேன். இந்தியாவில் சமூக நீதி மீது நம்பிக்கை கொண்ட இயக்கமாக காங்கிரஸ் செய்லபடுகிறது” என்று தெரிவித்துள்ளார்.